குரு பரிகாரம் எ‌ப்படி செ‌ய்யலா‌ம்?

சனி, 30 ஏப்ரல் 2011 (20:01 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: குரு பரிகாரம் என்பது எதற்கெல்லாம் செய்யலாம். எப்படி செய்யலாம்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: குரு என்றால் என்ன, மானசீகமாக நமக்கு உதவுபவர்கள். நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாகக் காரணமாக இருந்தவர்கள். இவர் இல்லையென்றால் இந்த நிலைமைக்கு நான் வந்திருக்கமாட்டேன் என்று ஒரு சிலரை ஒரு சிலர் நினைக்கிறார்களே, அதுதான் குரு.

கோயில், குளத்தில் இருக்கக்கூடிய குருவை விட, நமக்கு பக்கத்தில், சொந்தத்தில், நட்புவட்டத்தில் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கிய குருநாதர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து, நன்றி தெரிவித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய இன்னல்கள், இழப்புகள், ஏமாற்றங்களை நம்மால் முடிந்த வரையில் செய்யலாம். அவருக்கு பெரிய கஷடம், 10 லட்சம் தேவையென்றால், அதை நம்மால் கொடுக்க முடியாது. ஆனால், அதில் ஒரு பகுதியை பொருளாலோ, வார்த்தைகளாலோ சில உதவிகளைச் செய்யலாம்.

பிறகு, மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல தாய் தந்தையரை வணங்கலாம். இல்லையென்றால், தொடக்கப் பள்ளி ஆசிரியர் உங்களுடைய மனதைக் கவர்ந்தவராக இருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் தமிழை கம்பீரமாகவும், கலகலப்பாகவும் கற்றுக்கொடுத்தவராகவும் இருக்கலாம். அவர் நம்பிக்கை அளித்தால் இளங்கலை, முதுகலை எல்லாம் முடித்துவிட்டு சமூகத்தில் ஒரு நிலையில் இருக்கிறேன் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்ததை நினைவு கூர்வார்கள். அவற்றை நினைவுகூர்ந்து அந்தக் குடும்பங்களைப் பார்த்து தேடிப்பிடித்து ஏதாவது செய்வது.

எல்லாவற்றையும்‌‌விட குருவிற்கு பரிகாரம் என்றால், தாய்மொழியைக் கற்றுத்தருதல்தான் குருவிற்குப் பெரிய பரிகாரம். தாய், தாய்மொழி, தாய்நாடு, தாய் மண் இதற்கெல்லாம் உரியவர் குரு. பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு என்பதற்கெல்லாம் உரியவரும் குரு. மண் மணத்தை இழக்காமல் பெறுவதற்கான முயற்சி, தக்கவைத்துக் கொள்ளுதல், பிறகு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எல்லாமே குருவினுடைய அம்சம்தான். கொடிகாத்த குமரன் முதல் எல்லோருமே குருவினுடைய அம்சங்கள்தான். தவிர, சட்டதிட்டங்கள், அரசு ஆணைகள், டிராஃபிக்கில் சிக்னலைத் தாண்டிச் செல்வது போன்றதெல்லாம் குருவை கோபப்படுத்துவது மாதிரியானது. வக்கிர குருவாக ஆகிவிடுவார். அதனால், நம்மால் முடிந்த அன்றாட அலுவல்களில் ஒழுக்க சீலர்களாக, சின்னச் சின்னக் கட்டுப்பாடுகள், விதி மீறல்கள் இல்லாமல் விதிகளை அனுசரித்து நடந்தாலே அதுதான் உண்மையான குரு பரிகாரம்.

எல்லாவற்றையும் பெரிய ஆதி குரு தலம் திருச்செந்தூர். அங்குதான் குரு பகவானுக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்து, அருள் உபதேசம் கொடுத்தது. பிரணவ மந்திரங்களுக்கான உரைகளுக்கள், சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட இடமும் அதுதான். சுவாமி மலையில் சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது. இங்கு சில சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது. பிரம்மனும், பிரம்ம ரகசியத்தை முருகனிடம் இருந்து அறிந்த இடமும் திருச்செந்தூர். அதனால்தான் குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவன் திருச்செந்தூர் முருகன். அதனால் அந்த ஆலயத்திற்குச் சென்று வருவது சிறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்