தமிழ்.வெப்துனியா.காம்: பத்மநாபசாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள் நகைப் புதையலை பொது நலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சிவன் சொத்து குல நாசம் என்றொரு முதுமொழி உண்டு. இந்நிலையில், அந்த நகைகளை என்ன செய்யலாம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பொதுவாக, அந்த நகைகளைப் பாதுகாப்பாது நல்லது. ஏனென்றால், ஒருபக்கத்தில் சாமியினுடைய என்று சொன்னாலும், புராதானமான கலை நுணுக்கங்கள் அந்த நகைகளில் இருக்கும். அதை நம்முடைய தமிழனத்தை வெளிப்படுத்தக்கூடிய கருவியாகவும், உதாரணமாகவும் சொல்லிக்கொள்ளலாம். பொக்கிஷமாகவே சொல்லிக்கொள்ளலாம். அந்தக் காலத்தில் அரசனை தெய்வமாக மக்கள் நினைத்தார்கள். அரசனே ஆண்டவன் என்று சொன்னார்கள்.
அரசர், ஆண்டவனுக்கு பயந்து அரசாட்சி செய்த நல்ல அரசர்களும் உண்டு. சுகபோகங்களை தவிர்த்துவிட்டு ஆண்டவனுக்காக எல்லாம் செய்தவர்களும் உண்டு. ஆண்டவனை தங்களுடைய உண்மையான தலைவனாக நினைத்து, தாம் என்னென்ன சுகங்கள் அனுபவிக்கிறோமோ அத்தனை சுகங்களும் இறைவனும் அனுபவிக்க வேண்டும், தான் அணியக்கூடிய கிரீடம், தான் படுக்கக்கூடிய மென்மையான பட்டு என அத்தனையையும் பார்த்து பார்த்து இறைவனுக்கு செய்த அரசர்களெல்லாம் உண்டு. இன்றைக்கும், அர்த்த ஜாம பூஜை முடிந்த உடனேயே அம்பாளை கொண்டு பள்ளியறையில் விடுவது என்ற முறையெல்லாம் உண்டு. தில்லை நடராஜப் பெருமானுக்கெல்லாம் அர்த்த ஜாம பூஜை மிகவும் விசேஷமானது.
ஏனென்றால், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்று சோழர் காலத்தில் இதுபோன்று முறைப்படி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய அரண்மனையைக் கூட தங்கத்தால் வேய்ந்துகொள்ளாமல் ஆவுடையாருக்காக, நடராஜருக்காக எல்லாவற்றையும் செய்தவர்கள். இதுபோல அரசர்கள் முழுக்க முழுக்க தெய்வத்தையே நம்பி எல்லாவற்றையும் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் பெரிய அளவில் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துக்கொண்டு, விஸ்வகர்மாக்களை வைத்துக்கொண்டு ஆபரணங்களைச் செய்தார்கள்.
அரசவையில் ஒரு குழந்தை பிறக்கிறதென்றால், பால் கொடுப்பதற்காக கெண்டியை தங்கத்தில் செய்வார்கள். அதையே அரசன் இரண்டாக செய்து ஒன்றை இறைவனுக்கு காணிக்கையாக செய்து வைத்துவிடுவான். இதுபோலத்தான் அரசர்கள், இறைவனுக்கு முதல் காணிக்கை, பிறகு அதேபோன்றதொன்று அரசவையிலும் செய்து வைத்துக்கொண்டார்கள். அந்த மாதிரி செய்து செய்து வைத்ததால்தான் இதுபோன்ற பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கிறது. அதை நமது சின்னங்களாக பயன்படுத்தினால், நமது கலை, நாகரீகத்தை முரசு கொட்டி அறிவிக்கக்கூடிய பொருளாக அது இருக்கும். எனவே, அதனை அழிக்காமல் பாதுகாப்பதுதான் நமக்கு சிறப்பு.