ஹோமங்களால் ஐஸ்வர்யம் வருமா?

புதன், 9 நவம்பர் 2011 (19:30 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: ஐஸ்வர்யம் அருளும் ஹோமங்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் நடக்கிறதா? ஹோமங்களால் மட்டுமே ஐஸ்வர்யம் வந்துவிடுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஹோமம் என்பது என்ன, ஏதாவது ஒன்றைப் பற்றி அடுத்தடுத்து தியானித்தல். ஹோமங்கள் என்பது, திரவியங்கள், ஆலங்குச்சி, அரசங்குச்சி போன்றவற்றை போட்டு எரிப்பது. அக்னி கோத்ரம் என்று சொல்வார்கள். பண்டைய நூல்களில் தமிழர் முறை என்று பார்க்கும் போது, சித்தர்கள் இதுபோன்ற ஹோமங்களுக்கு உடன்படவில்லை. முனிவர்கள் வேறு, சித்தர்கள் வேறு. சித்தப் புருஷர்கள் சொல்லும் விஷயங்கள் வேறு.

திருமூலர் திருமந்திரத்தில் ஹோமம் பற்றியெல்லாம் சொல்லவே இல்லை. அதுபோல, தாயுமானவ சுவாமிகள் கோயிலிற்குச் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை. நெஞ்சகமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராமரமே. அதாவது, என் நெஞ்சுக்குள் நீ இருக்கிறாய், நினைவலைகள் எனும் சுகந்த மலர்களால் உன்னை அர்ச்சிக்கிறேன், அன்பெனும் மஞ்சன நீரால் அபிஷேகம் செய்கிறேன், பூசை கொள்ள வாராய் பராபரமே என்கிறார். இதில் என்ன சொல்கிறார்கள், மனதைக் கட்டுப்படுத்தி இதயத்திற்குள்ளாகவே வைத்துக்கொள்வது. இரண்டு இமைகளுக்கு இடையே உள்ள மையம் இமயம். அங்கேயும் ஒரு இமயம் இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இமயம் இருக்கிறது.

எதையெல்லாம் வேதங்கள் சொல்லக்கூடிய ஆகம விதிகள்படி கோயில்களை எழுப்பி வைத்திருக்கிறோமே அதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதனால், வெளியில் நான்கு பேரை வைத்து மந்திரங்கள் சொல்லி, அவர்கள் நமக்கான முகவராக இருப்பதைவிட, நாம் நம்மை கட்டுப்படுத்தி நமக்குத் தெரிந்த சில மந்திரங்களைச் சொல்லி - ஆதிசங்கரர் என்ன மந்திரங்களைச் சொன்னார். லட்சுமியை செளந்தர்ய லகரி படித்து, கணகதோரா தோத்திரம் சொல்லி எப்படி எல்லாவற்றையும் பெற்றார். அதாவது தங்க நெல்லிக்கனி பெற்றதெல்லாம் ஹோமங்கள் செய்தெல்லாம் பெற்றது கிடையாது.

மனதைக் கட்டுப்படுத்தி, இதய மையத்தில் தியானித்து முழுமையாக வேண்டும் போது, நினைக்கும் போது நமக்கு செல்வத்தை பெறக்கூடிய எண்ணம், பாதை தெரியும். வீட்டின் ஓடு பிரித்தெல்லாம் கொட்டாது. சிலரெல்லாம் அறிமுகமாவார்கள். அந்த அறிமுகத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தி அந்தப் பாதையில் செல்லும் போது ஐஸ்வர்யம் கூடிவரும். அது முடியதவர்கள் ஹோமம் செய்து கொள்ளலாம். மனதைக் கட்டுப்படுத்தி, தன்னுடைய தேவைகளை தானே இறைவனிடம் கேட்கத் தகுதியற்றவர்கள் ஹோமம் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்