ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால்...

வியாழன், 17 பிப்ரவரி 2011 (18:30 IST)
த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: திருமணப் பொருத்தத்தில் எத்தனைப் பொருத்தம் சரியாக இருந்தாலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் தவிர்த்துவிடுவது ஏன்? இது சரியா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: மிக முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது ஜாதகனின் ஆயுள் எப்படியுள்ளது என்பதை அது குறிக்கிறது. நமது கிராமங்களில் இதனை கழுத்துப் பொருத்தம் என்று பெண்கள் கூறுவார்கள்.

என்னிடம் ஒரு குடும்பம் வந்தது. மணமகனின் ஜாதகத்தைக் காட்டியது. நான் ரஜ்ஜுப் பொருத்தம் சரியில்லை என்று கூறிவிட்டேன். அவர்கள் விடவில்லை. நாங்கள் 3 இடத்தில் பார்த்துவிட்டோம். எல்லோரும் செய்யலாம் என்கிறார்கள் என்றனர். பெண் வீட்டார் விடுவதாக இல்லை.

ஜாதகப்படி இருந்தால்தான் நான் சொல்வேன் எ‌ன்றே‌ன். இல்லை இல்லை, பையன் அருமையான பையன். ஹீரோ மாதிரி இருக்கிறான் என்றார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பையனைப் பார்த்ததில்லை. ஜாதகம்தான் நான் பார்க்கிறேன். உங்களுடைய பர்சனாலான விஷயமெல்லாம் வேண்டாம். அதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். என்னுடைய கணிப்பை நீங்கள் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு, செய்யக்கூடாது என்று எழுதி கொடுத்துவிட்டேன். மீறி செய்தார்கள். மூன்றே நாள்தான், பையன் இறந்துவிட்டார்.

இறந்துவிடுவார் என்ற விஷயத்தைச் சொன்னீர்களா?

அதை சொல்லியும் சொன்னதற்கு, பெண்ணுக்குத்தான் ஜாதகம் பார்க்க வந்தார்கள். அழகான பையன் இவனையே முடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் பார்க்க வந்தார்கள். அந்தப் பெண்ணோட அப்பா இங்கேயே உட்கார்ந்துகொண்டு, கல்யாணம் பண்ணலாம் என்று சொன்ன ஜோதிடருக்கு ஃபோன் போட்டு, இங்கே வித்யாதரன் கிட்ட வந்திருக்கிறோம். அவர் பையனுக்கு ஆயுள் இல்லை என்று சொல்கிறார் என்று பேசிவிட்டு ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். அவரும், ஆயுள் காரகன், அது இது என்று எல்லாம் பார்த்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் செய்யலாம் என்று சொன்னார்.

அதற்கு நான் சொன்னேன், ஆயுள் காரகன், ஆயுள் ஸ்தான அதிபதியோட மனைவி ஸ்தானத்திற்கு உரிய கிரகம் சேர்ந்து கிடக்கிறது. அதனால் அவருக்கு ஒரு சுபம் நடந்து உடனேயே ஒரு அசுபம் நடக்கும் ஜாதகமாக இருக்கிறது. அதுவும் தற்பொழுது ராகு திசையில் சனி அந்தரம். அதனால் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லைங்க, நான் சொன்னா சொன்னதுதாங்க. நீங்க வேண்டுமானால் எங்க இடத்தில் வந்து விசாரித்துப் பாருங்கள் என்று சொ‌ன்னார்.

இ‌ப்ப பாருங்க, அதனால் என்ன ஆனது என்று. மீண்டும் அவர்கள் வந்திருந்தார்கள். கலைப்படாதீர்கள். உங்களுடைய பெண்ணிற்கு மறுமணம் இருக்கிறது. ஆனால் இது நீங்களா செய்த தப்பு. அதனால் நீங்கதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னேன்.

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம் செய்யலாம். ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம். கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள் கிராமத்தில். கழுத்து மட்டும் நல்லா இருக்கிறதா என்று பார்த்து சொல்லு ஜோசியரே. அது இருந்தா போதும். மற்றது இல்லைன்னாலும், காலையில அடிச்சுக்கும் சாயங்காலம் கூடிக்கும் என்று சொல்வார்கள்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தது என்றால் அது நன்றாக இருக்கும். 7ஆம் இடம், 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலோ, சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7, 8ஆம் இடங்களை சுப கிரகங்கள் பார்வையிட்டாலோ ரஜ்ஜு பொருத்தமே இல்லையென்றாலும் துணிந்து திருமணம் முடிக்கலாம்.

ஆனால், இப்பொழுது நிறைய பேருக்கு ரஜ்ஜு பொருத்தம் இருக்கிறது. அது இருந்தும் விவாகரத்து ஆகிறது. காரணம் என்னவென்றால், அன்றைக்கு ஒருவர் வந்திருந்தார். மேஷ லக்னம், மேஷ ராசி அ‌ந்த‌ப் பையனு‌க்கு. பையனு‌க்கு 7இல் சனி இருந்து அடுத்து சனி திசை தொடங்கப் போகிறது. இவருக்கு 7ஆம் இடத்தில் சனி திசை வரப்போகிறது. மேஷ லக்னம், மேஷ ராசிக்கு சனி பாதகாதிபதி திசை அவருக்கு வருகிறது. மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அல்லது மனைவி விபத்தில் இறக்க நேரிடும். அதனால் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னேன்.

அதற்கு, யாரை செய்து வைத்தாலும் இறந்துவிடுவார்களா? என்று கேட்டார்.

இதற்கு, மறுமணம்தான் செய்ய வேண்டும். இளம் விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணை மனமுடித்து வைப்பது நல்லது. அதன்மூலமாகத்தான் இதை சரி செய்ய முடியும். இல்லை, நாங்கள் சனீஸ்வரனை பார்த்துவிட்டு வந்துவிட்டோம் என்று சொன்னார்கள். அதற்கு, நீங்கள் ஆன்‌மீகமாகப் போனீர்கள். ஆத்ம திருப்திக்காக வணங்கினீர்கள் எல்லாம் சரிதான். அறிவியல்பூர்வமாகப் பார்க்கும் போது, நாங்கள் அதை சரி செய்துவிட்டோம் என்று சொல்லக்கூடாது. இறைவனை வணங்குவது நிம்மதிக்காகவும், பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தைக் கொடுப்பதற்காகவும்தான்.

ஆகவே, இவருக்கு சனி திசை நடக்கும்போது பெண்ணிற்கு குரு திசை, சுக்ர திசை அல்லது புதன் திசை என நல்ல யோக திசை நடக்கிற பெண்ணாக பார்த்து சேர்த்து வையுங்கள். இல்லையென்றால், மணமுறிவு பெற்ற பெண், இளம் விதவை, சற்றே ஊனமுற்றப் பெண் போன்று பார்த்து முடித்து வைத்தால், கடைசி வரைக்கும் இந்தப் பையனுக்கு மண வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையென்றால் சனி திசை நடக்கும் 19 வருடத்திலும் அடுத்தடுத்து கல்யாணம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். இதுவரைக்கு‌‌ம் அந்தப் பையனுக்கு நான்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்.

நல்ல வசதி, வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் சொல்வதற்கு ஒத்தே வரமாட்டேன்கிறார்கள். கன்னிப் பெண்ணாக பார்க்கிறார்கள். கிராமத்திற்கு எங்காவது செல்ல வேண்டியது. அவர்களிடம் பேசி ஒப்புக்கொள்ள வைப்பது. அப்படி செய்து வைத்த பிறகு மூன்று அல்லது நான்கு மாதம் இருக்கும். ஒன்று, ஓடிப் போய்விடும் அல்லது விபத்தில் இறந்துவிடும். தற்பொழுது கடைசியாக இறந்த பெண் காமாலை வந்து இறந்தது.

அப்ப, ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் தசா புத்திகளையும், 7ஆம் இடம் 8ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்த்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது நீடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்