ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை மாற்ற முடியுமா?
புதன், 4 நவம்பர் 2009 (13:40 IST)
ஒரு சில ஜாதகருக்கு முதல் மனைவி நிலைக்க மாட்டார்; இறந்துவிடுவார் அல்லது பிரிந்து விடுவார். எனவே, அவருக்கு 2வது மனைவிதான் நிலைக்கும் என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அதுபோன்ற ஜாதகருக்கு முதல் மனைவியுடன் காலம் முழுவதும் வாழும் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா? அதற்கு ஜோதிடத்தில் என்ன பரிகாரம் கூறப்பட்டுள்ளது? ஜோதிடத்தில் இதுபோன்ற அமைப்பை ‘தார தோஷம்’ என்று கூறுவார்கள். அதாவது தாரத்திற்கு ஏற்படும் தோஷம் என்று பொருள்.
ஒருவரின் ஜாதகத்தில் தார தோஷம் இருந்தால், அவருக்கு நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடிக்காமல், அவரது 7, 8வது இடத்தில் உள்ள கிரக அமைப்பையும் பார்த்து அதற்கு ஏற்றது போல் அமைப்புள்ள துணையை அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தத்தை பொறுத்தவரை தற்போது 10 பொருத்தம் பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட நான்கு பொருத்தம் இருந்தால் கூட திருமணம் செய்யலாம். ஆனால் கிரக அமைப்புகள் இருவருக்கும் நன்றாக, பொருந்தக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
முதல் தாரத்தை இழக்கும் சூழல் ஒரு ஜாதகருக்கு இருக்குமானால் அவருக்கு தாமதமாக திருமணம் செய்யலாம். உதாரணமாக 25 முதல் 29 வயதிற்குள் திருமணம் செய்யாமல் 31 வயதிற்கு மேல் நடத்தலாம்.
சிலருக்கு தார தோஷம் மிகக் கடுமையாக இருக்கும். அதுபோன்றவர்கள் 31 வயதிற்கு மேல் திருமணம் செய்தாலும், தங்கள் ஜாதியில் இருந்து பெண் எடுப்பதை விட சற்றே தாழ்ந்த பிரிவில் (அதே ஜாதியில்) பெண் எடுக்கலாம் அல்லது மணமுறிவு பெற்றவர்களை மணக்கலாம். இதெல்லாம் நடைமுறைப் பரிகாரங்கள்.
இதுமட்டுமின்றி சில கோயில்களில் பரிகாரங்கள் செய்தால், முதல் தாரம் அவருக்கு இறுதி வரை நிலைக்கும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.