சகோதரர்களில் ஒருவர் மட்டுமே சிறப்பான கல்வியறிவு பெறுவது எதனால்?

வியாழன், 11 பிப்ரவரி 2010 (18:11 IST)
ஒரு வீட்டில் 2 குழந்தைகள் இருந்தாலும் அவர்களில் ஒருவர் மட்டும் கல்வியில் உயரிய நிலைக்கு செல்கின்றனர். அவருடன் ஒன்றாகப் படித்த போதும் மற்றொருவரால் அந்த உயரத்தை எட்ட முடிவதில்லை இது ஏன்?

பதில்: உளவியல் நிபுணர்களான புளூம், கோல்மென், சின்மன் பிராய்ட் ஆகியோர் குரோமோசோம்களைக் கணக்கிட்டு ஒருவரின் அறிவுத்திறனைக் கணக்கிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

ஜோதிடப்படி பார்க்கும் போது தம்பதியருக்கு நல்ல தசா புக்தி நடக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் சிறப்பாக இருக்கும் என நூல்களில் கூறப்பட்டுள்ளது. தற்போது மக்களிடைய இதுபற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொண்டவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளவதை விட, ஜோதிட ரீதியாக சிறப்பான காலம் நிலவும் போது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தம்பதிகள் தற்போது முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பூர்வ புண்ணியாதிபதி புக்தி, சுகாதிபதி தசை, பாக்கியாதிபதி தசை, லக்னாதிபதி தசை நடக்கும் போது உருவாகும் குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாக இருப்பர் என அவர்களிடம் கூறுகிறோம். எனினும் அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி போன்ற மோசமான தசை நடக்கும் போது கர்ப்பமடைவதை தவிர்ப்பதும், தள்ளிப் போடுவதும் நல்லது என்றும் அறிவுறுத்துகிறோம்.

நல்ல தசா புக்தி நடக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே நல்ல கல்வி கிடைக்கும். ஆனால் தசா புக்தி சரியில்லாத நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனம், கிரகிக்கும் சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாடு இருக்காது. எனவே, அவர்களுக்கு நல்ல புறச்சூழல் அமைத்துத் தருவதன் மூலம் சிறப்பான கல்வியை போதிக்க முடியும்.

உதாரணமாக சனி தசை நடக்கும் போது பிறந்த குழந்தை எதையும் சுறுசுறுப்பாகப் புரிந்து கொள்ளாது. ஆனால் அதற்கு முன் பிறந்த குழந்தை (அண்ணன், அக்கா) சுட்டியாக இருக்கும். எனவே அவர்களுடன் 2வது குழந்தையை ஒப்பிட்டுப் பேசி அதன் மனதைக் காயப்படுத்தாமல், முதல் குழந்தையின் உதவியுடன், அன்பாகப் பேசி 2வது குழந்தைக்கு சில விஷயங்களை சொல்லித் தரலாம்.

இதுபோன்ற யதார்த்தமான பரிகாரங்கள் மூலம் முதல் குழந்தை அளவுக்கு 2வது குழந்தையை கல்வித்துறையில் முன்னேற வைக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்