தியானம் என்பது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருளாகும். இது அன்றை காலந்தொட்டு இன்றைய காலம் வரை மக்களால் உணரப் பட்டதொன்றாகும்.
இறையுணர்வுகள் தேய்ந்து வரும் இக்காலத்தில் தியானம் என்ற சொல்லின் பொருளை சாமன்ய மக்களாலும், கல்வி அறியுள்ளோராலும் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. மனதைச் சற்றும் சலனமற்ற நிலையில் ஒரே எண்ணத்துடன் பிடிப்புடன் ஒரே நிலைப்பாட்டுடன் நிற்க வைத்தல் என்று தியானத்தைப் பற்றி பொதுவாக பொருள் கொள்ளலாம்.
நமது ஆன்றோர்கள் தியானம் என்ற சொல்லையும் தியானத்தையும் ஆன்மீகம் சம்பந்தமாக இணைத்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.
சிலர் தியானம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதனால் சாமான்யனுக்கு எந்தவித பயனும் இல்லையென்று உணர்ந்து அது ஒரு உபயோகமற்றச் சொல் என்று எண்ணம் கொண்டுள்ளனர். இதனால் மனிதனுக்கு எவ்வித பயனும் கிடையாது என்று தவறாக எண்ணி வருகின்றனர்.
மனிதனை நல்ல மனிதனாக்க மதம், கடவுள், தியானம், பக்தி போன்றவை இன்றியமையாததென்பதை இன்னும் பலரால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சக்திகள் யாவும் வாழ்வை நெறிப்படுத்தி, சரியான வழி நடத்தி அவன் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வாரி வழங்கும் மாபெரும் சக்திகளாகவே காலங்காலமாக அமைந்து வந்துள்ளன.
இவ்வுலக வாழ்க்கையிலேயே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கும் வல்லமை, மதம் கடவுள் நம்பிக்கை பொன்ற ஆன்மீக எண்ணங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமென்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.
ஆழ்நிலை தியான விதிமுறைகள்
1. ஆழ்நிலை தியானத்தை தினமும் காலையிலும், மாலையிலும், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.
2. உட்காரும் போது சௌகரியமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், நேராக உட்கார வேண்டுமென்ற அவசியமில்லை.
3. தியானத்தின் போது வயிறு காலியாகயிருப்பது நல்லது.
4. தூங்கப் போகும் முன்பாக தியானத்தில் ஈடுபடக் கூடாது.
5. தியானம் செய்யும் போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டுமென்பதில்லை.
6. ஆற அமர உட்கார்ந்து பின் கண்களை மூடி பதட்டமேதுமின்றி அரைநிமிடம் கழிந்த பின்பு தியானத்தைத் தொடங்களாம்.
7. தியானம் செய்யுமிடம் அமைதியான சூழ்நிலையில் திகழ வேண்டும்.
8. தியானத்தின் போது நித்திரை வந்தால் விழித்திருக்க முயற்சிக்க வேண்டாம்.