வாழ்வில் வளம் பெற ஈச்சனாரி விநாயகர் வழிபாடு!

``விநாயகனே வெல்வினையை வேரறுக்கவல்லான
விநாயகனே வேட்கை தணிவிப்பான
விநாயகனே விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனுமாம
மாமயிலோன் கண்ணில் பணிமின் கனிந்து"

எந்தவொரு செயலை தொடங்கவேண்டும் என்றாலும் விநாயகரை நினைத்து பிள்ளையார் சுழிபோட்டு தொடங்க வேண்டும் என்பார்கள். விநாயகரை நினைக்காமல் எந்தக் காரியத்தை தொடங்கினாலும் அதனால் சிறுசிறு தடைகள் ஏற்படும் என்பது ஐதீகம். தந்தையாகிய சிவபெருமானே கூட விநாயகருக்கு முதலிடம் தருகிறார். முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்க தனது அண்ணன் விநாயகனை வேண்டிக் கேட்டுக் கொண்டபின்னரே அவருக்கு உதவி புரிந்து அருளினார் விநாயகர் என்பதையெல்லாம் அறிகிறோம்.

அனைத்து கோயில்களிலுமே விநாயகப் பெருமான் சன்னதி காணப்பட்ட போதிலும், விநாயகனே மூலவராகத் திகழும் குறிப்பிட்ட சில கோயில்களில் ஈச்சனாரி விநாயகர் கோயில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. ஈச்சனாரியின் தலச்சிறப்பு பற்றி பார்ப்போம்.

வேண்டுதல

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் முதன்மையானது ஈச்சனாரி.

இத்தலத்து விநாயகரை மனமுருகி வேண்டிக் கொண்டால் தாங்கள் எடுத்த காரியத்தில் தடங்கல் அகலுவதாக இத்தலத்துக்கு வந்து சென்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்திற்கு வந்து பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். தவிர வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வுக்காகவும் இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுவதாக இங்கு தொடர்ந்து வருவோர் தெரிவிக்கிறார்கள்.

இங்கு வீற்றிருக்கும் விநாயகர் 5 அடி உயரமும், 3 அடி பருமனுடனும் பிரமாண்டமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.

அமைவிடம

கோவை நகரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பது ஈச்சனாரி. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோவைக்கு பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்து வசதி இருப்போர், கோவை ரயில் நிலையத்தை அடைந்து பின்னர் ஈச்சனாரியை அடையலாம். கோவையிலேயே விமான நிலையமும் இருப்பது கூடுதல் சிறப்பு.

வாழ்வில் வளம் பெற ஈச்சனாரி விநாயகர் வழிபாடு!


தல வரலாற

மேலைச்சிதம்பரம் என்று போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட ஈச்சனாரி மூலவர் சிலை மதுரையில் இருந்து கொண்டு பேரூருக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.

சிலை கொண்டுசெல்லப்பட்ட வண்டியின் அச்சு வழியிலேயே முறிந்து விட்டது.

அப்போது இந்தச்சிலை தற்போதுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாக புராணத்தகவல்களை மேற்கோள்காட்டி செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருள்வாக்குப்படி இச்சிலை இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பின்னர் இந்த இடமே ஈச்சனாரி என்று பெயர் வழங்கலாயிற்று.

சிதறு தேங்காய், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலாபிஷேகம் செய்தல் போன்றவை இக்கோயிலில் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.

சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தல் போன்றவற்றையும் இத்தலத்திற்கு வருவோர் நேர்த்திக் கடனாக செலுத்தி வருகிறார்கள்.

நட்சத்திர பூஜ

இக்கோயிலில் அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது.

நட்சத்திர அலங்கார பூஜையானது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கோயிலின் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் கோயிலின் மின் கட்டணம் அனைத்தும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருவது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

தலப்பெரும

நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்பு பெற்ற விநாயகர் தலமாக ஈச்சனாரி விளங்குகிறது. கோயிலின் அழகிய கோபுரம், மாடங்கள், மண்டபங்கள் வேறு எங்கும் காண முடியாதவை.

முக்கிய விழாவாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா இங்கு 2 நாட்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து கூடி விநாயகரை வழிபட்டுச் செல்கிறார்கள்.

தவிர மாத கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களிலும் ஈச்சனாரியில் பக்தர்கள் கூடுவர். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு நாட்களிலும், இதர விசேஷ தினங்களிலும் ஏராளமானோர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

ஈஸ்வர மைந்தனாம் ஈச்சனாரி விநாயகரை சென்று வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்