அக்ஷய திருதியை

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அக்ஷய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் ஹோமம், ஜபம் முதலியவை செய்வதால் நம்முடைய செல்வமும் பலமடங்காகப் பெருகி வலம் செழிக்கும் என்பது நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை.

அக்ஷய என்ற சொல்லுக்கு மேலும் மேலும் அழிவின்றி வளர்வது என்று பொருள்.

இந்த ஆண்டு சித்திரை 17-ம் தேதி (ஏப்ரல் 30) ஞாயிற்றுக்கிழமை அக்ஷய திருதியை வருகிறது.


தான தர்மங்கள், அன்னதானம் முதலியவை செய்வதோடு செல்வத்தின் அடையாளமாக விளங்கும் தங்கம், வெள்ளி ஆடைகள் முதலியவற்றை அன்று வாங்கினால் அவை மேலும் மேலும் பெருகி வளரும் என்பதும் பலகாலமாக இருந்துவரும் நம்பிக்கைதான்.

மகாபாரதத்தில் இரண்டு கதைகள் இதற்கு உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

வறுமையில் வாடிய குசேலர், தன் மனைவியின் விருப்பப்படி கண்ணனைக் காணச் செல்கிறார்.

தான் கொண்டுவந்த ஒரு பிடி அவலை தன் நண்பனுக்கு எப்படிக் கொடுப்பது என்று சங்கடப் பட்டுக் கொண்டிருந்தபோது கண்ணன் "அக்ஷய" என்று சொல்லி அந்த அவலை விரும்பி வாங்கிச் சாப்பிட்டார்.

வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு எல்லாம் செல்வச் செழிப்புடன் விளங்கியதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் பாண்டவர் வனவாசத்தின்போது ஒரு நாள் துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் அங்கு வந்தார்.

தாம் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், ஆற்றில் குளித்துவிட்டு அவர்களுடன் உணவுண்பதாகவும் கூறிச் சென்றனர். பாண்டவர்களோ ஏற்கனவே உணவு உண்டு விட்டதால் சமையலறையில் உணவேதும் மீதியில்லை.

துர்வாச முனிவரின் கோபத்துக்கு அஞ்சிய திரௌபதி கண்ணனை வேண்ட, கண்ணன் அவருடைய நிலைக்கு மனமிரங்கி அட்சய பாத்திரத்தை அளித்தார். பாத்திரத்தில் மீதியிருந்த ஒரே ஒரு பருக்கை பலமடங்காகப் பெருகி உணவு வகைகளும் நிரம்பி வழிந்தன. ஆனால் துர்வாச முனிவரோ வரும்போதே தமக்குப் பசியாறிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார்.

இதுவும் கண்ணனில் திருவிளையாடல் தானே!

அம்பிகையே அன்று தன் கையால் இறைவனுக்கு உணவளிக்கிறாள் என்றும், ஆகவே நாமும் சாப்பிடும் உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து மாலையில் பசுமாட்டிற்கு உணவளித்துவிட்டு உணவுண்பது நல்லது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவன் நினைவில் பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் இறையருளை வேண்டி அஷய திருதியை நாளைக் கொண்டாடுவோமாக.

வெப்துனியாவைப் படிக்கவும்