புகழ்பெற்ற தோழிகள்

உங்கள் தோழி திடீரென்று புகழ் பெற்றவளாகிவிட்டாள்! அவள் இப்போது எல்லோர் கவனத்தையும் கவரும் பெண் ஆகிவிட்டாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் எப்படி அவளுடன் பழக வேண்டும்? நீங்கள் அவளுக்கு அதிக மரியாதை அளிக்க வேண்டுமா? அல்லது பொறாமையால் அவளை தவிர்க்க வேண்டுமா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ரிலாக்ஸ்! எப்பொழுதும் போல் சாதாரணமாக இருங்கள். உங்கள் தோழி புகழ் பெற்றவளாகிவிட்டால், அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். அவளிடம், நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுங்கள். அவளுடன் பல பேர் தோழிகளாக வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அவர்கள் அவளை அதிகமாக அல்லது பொய்யாக புகழக்கூடும். அவர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். நீங்கள் பழைய நட்பையே தொடர முயற்சியுங்கள். அவள் மற்றவர்களுடன் நேரம் செலவிட்டால், பொறாமைப் படாதீர்கள். மற்றவர்களுடன் அவள் சேருவதைத் தடுக்க முயற்சிக்காதீர்கள். மற்றவர்களுடன் நட்புடன் பழகினாலும், உங்கள் நட்பின் மதிப்பை அவள் அறிவாள். உங்களோடு இருப்பதை விட அவளின் புதிய சூழ்நிலை அவள் மற்றவர்களுடன் அதிக நேரம் இருக்கச் செய்யலாம். கவலைப் படாதீர்கள், அவள் தன்னுடைய அனுபவங்களை பங்கு போட உங்களையே தேடி வரக்கூடும்.

நீங்கள் தனிமையிலே வாடாமல், புதிய தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் பழைய தோழியை சரியாக புரிந்து கொள்ள உதவும். அவளுடைய புதிய சூழ்நிலை, புகழ் காரணமாக உங்களுடைய விருப்பமிக்க மூலையில் உள்ள ஐஸகிரீம் கடைக்கு வர முடியாமல் போகலாம். அதற்காக வருந்த வேண்டாம். இருவருக்கும் ஏற்றதாக உள்ள வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அவளுடன் சேர்ந்து பணம் செலவு செய்வதில் போட்டி போடாதீர்கள். உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டுமே செலவு செய்யுங்கள். உங்களிடம் அதற்கு மேலும் பணம் இல்லை என்பதை அவளிடம் சொல்ல கூச்சப்பட வேண்டாம். புகழ் பெறுவதற்கு முன் அவள் உங்களுடைய தோழிதானே!

ஆனால் புகழ் வந்தவுடன் சிலர் வித்தியாசமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள். அவள் வேண்டுமென்றே உங்களைத் தவிர்க்க விரும்புகிறாளா அல்லது உங்களை சரியான முறையில் நடத்தவில்லையா, அல்லது மற்றவர் முன் உங்களை மட்டம் தட்டுகிறாளா ? அவற்றை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவளிடம் நேரில் உங்கள் மனதில் பட்டதைக் கூறிவிடலாம். அவள் அதற்காக வருத்தம் தெரிவித்தால் ஓ.கே. மீண்டும் அதுபோலவே நடக்கத் தொடங்கினால் அவளுடன் சேருவதைத் தவிர்க்கவும். புதிய தோழிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தோழிகள் உங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்ய வேண்டும், மனம் வருந்தச் செய்யக்கூடாது. அவள் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால் அவள் உங்களை தவறாக நடத்துவதற்கு அவளுக்கு உரிமையில்லை.

ஆம், உங்கள் மனம் வருந்தக்கூடும், ஆனால் அது உங்களை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய தோழிகளைத் தேடி அவர்களுடன் உங்கள் ஒரே மாதிரியான விருப்பங்களை பங்கு போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் பழைய புகழ் மிக்க தோழியின் நடத்தையைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கூடும்.

புகழ் பெற்றவராயினும், சாதாரணமானவராயினும் தோழிகள் எப்பொழுதும் தோழிகளே! அவர்கள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உதவுபவராகவும், நம் துன்பத்திலும் சந்தோஷத்திலும் பங்கெடுத்துக் கொள்பவராகவும், நாம் எப்படிப் பட்டவர் என்பதை நன்கு புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்