சிறையிலிருந்து வெளியேற ஏன் துடிக்கிறார் சசிகலா? - பகீர் தகவல்கள்

வெள்ளி, 5 மே 2017 (13:10 IST)
சிறையிலிக்கும் சசிகலா தரப்பு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணி வெளியே கசிந்திருக்கிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உச்ச நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யவேண்டும் என சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
இதை முன்பே அவர் செய்திருக்கலாம். ஆனால், தற்போது அந்த முடிவை அவர் எடுத்திருப்பதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சிறைக்கு செல்லும் நேரத்தில் தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக்கி, அதிமுக கட்சியை அவரிடம் ஒப்படைத்து சென்றார் சசிகலா. ஆனால், ஜெ.வின் மரணத்திற்கு பின் தமிழகத்தில் கால் ஊன்ற கணக்குப் போட்ட பாஜக இதை ரசிக்கவில்லை. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டதன் மூலம், முதல்வர் பதவிக்கு தினகரன் குறிவைப்பதை பாஜக அரசு புரிந்து கொண்டது. எனவே, சசிகலா குடும்பத்தினரின் பிடியிலிருந்து அதிமுகவை விடுவிக்க காய்கள் நகர்த்தியது.
 
தினகரனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்த மத்திய அரசு, ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தை கையில் எடுத்து, விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி தினகரனுக்கு நெருக்கடி கொடுத்தது. அதேபோல், அந்நிய செலவாணி வழக்கை தூசி தட்டி, நீதிமன்றத்தில் அவரை நிறுத்தியது. தற்போது, இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில், பல கட்ட விசாரணைக்கு பின் அவரை திகார் சிறையிலும் அடைத்து விட்டது. 


 

 
இந்நிலையில், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இரட்டை இலை சின்னத்தை பெற ஓ.பி.எஸ் அணியோடு இணக்கமாக போவதே சரி என முடிவெடுத்த அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு, ஓபிஎஸ் அணியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், முதல்வர் பதவி, ஜெ.வின் மரணம் குறித்து விசாரணை,  சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கைகளை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை. 
 
எனவே இதுரை பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. அது நடைபெறும் சூழ்நிலையும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், மத்திய அரசின் விருப்பப்படியே தமிழகத்தில் ஆட்சி நடைபெறும் என்பதை உறுதிபடுத்தும் வகையில், மத்திய அரசை யாரும் விமர்சிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதேபோல், சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிடமாட்டார்கள் என மத்திய அரசிற்கு முதல்வர் தரப்பு உறுதியளித்திருப்பதாகவும் தெரிகிறது.


 

 
எனவே, இதற்கு மேல் விட்டால் அதிமுக என்கிற கட்சி மொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகி சென்று விடும் என சசிகலா தரப்பு கருதுகிறது. எனவேதான், மறுசீராய்வு மனுவை சமர்பித்துள்ளார் சசிகலா. ஏனெனில், முன்பெல்லாம் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அவரின் வழக்கறிஞர்கள் சசிகலாவை அடிக்கடி சந்தித்து வந்தனர். சிறையிலிருந்தவாறே கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்தினார் சசிகலா.
 
ஆனால், அதற்கு தற்போது சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அவரை சந்திக்கும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, நாம் வெளியே வந்தால்தான் அதிமுக தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் எனவும், மறுசீராய்வு மனு மூலம் தீர்ப்பு தடை கிடைத்து விட்டால், ஜாமீனில் எப்படியும் வெளிவந்துவிடலாம் என சசிகலா தரப்பு நம்புவதாக தெரிகிறது.  அதேபோல், விரைவில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த ஒரு முக்கிய நபருக்கு கட்சியில் முக்கிய பதவி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அதிமுகவை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசும், கட்சியை தங்களின் கட்டுப்பாடியில் வைத்துக்கொள்ள சசிகலா தரப்பும் திட்டம் போட்டு காய்கள் நகர்த்தி வருகின்றனர்.
 
இதில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

வெப்துனியாவைப் படிக்கவும்