அதிமுக ஆட்சியையும், இரட்டை இலையும் தீபாவிற்கே! - பேரவை உறுதி

சனி, 4 பிப்ரவரி 2017 (15:23 IST)
அதிமுக ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் தீபா கைப்பற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதி தீபா பேரவையினரின் தீர்மானம் நிறைவேற்றினர்.


 

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கினர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலரும். தங்களை ஜெ. தீபா பேரவையில் இணைத்துக் கொள்வதுடன், அப்பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்களை பலரையும் தீபா பேரவையில் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட தீபா பேரவையினரின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், புதுக்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர். இதில், தூத்துக்குடி மாவட்ட தீபா பேரவை பொறுப்பாளர் சிவபெருமாள் என்ற சேட் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் அவரது அண்ணன் மகள் தீபா தலைமையிலான கட்சியை துவங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்ட வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அதிமுக ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கொடியையும் தீபா கைப்பற்றுவதற்கு பேரவையினர் அனைவரும் உறுதுணையாக இருப்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்