மிரட்டும் மத்திய அரசு; முற்றும் நெருக்கடி ; விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்?

வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (13:21 IST)
வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து, விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக அரசிற்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக பல புகார்கள் எழுந்ததால், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.   
 
அதில் ரூ.89 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதரங்களை விஜயபாஸ்கர் தரப்பிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றினார். மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில முக்கிய அமைச்சர்கள் மூலமாகவும் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது என செய்திகள் வெளியானது.
 
அதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர். மேலும், வருமான வரித்துறையினர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்க விஜயபாஸ்கர் 3 நாள் அவகாசம் கேட்டார். அதன் பின் வருமான வரித்துறையினரிடம் மீண்டும் விளக்கம் அளித்தார்.
 
இதனால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் எழுந்தது. விஜயபாஸ்கரை அழைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியதாகவும், ஆனால், அதற்கு விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.  அதன் பின்புதான், விஜயபாஸ்கரை நீக்கம் செய்யவில்லை என தினகரன் பேட்டி கொடுத்தார்.
 
ஆனால், அவரை நீக்காவிட்டால் தமிழக அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவி எந்நேரமும் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்