பொதுச்செயலாளரை நீங்கள் தேர்ந்தெடுங்கள் ; முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்யட்டும் - சுப.வீ

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (15:42 IST)
தமிழக முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே உள்ளது எனவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு, அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும், அடுத்த முதல்வரும் அவர்தான் என்று பரவலாக அதிமுகவினரால் பேசப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அதிமுகவின் பொதுக்குழு சசிகலாவைத் தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை உடையது. இது அக்கட்சியின் உள் விவகாரம் என்று விலகி நிற்க முடியாது. ஏனெனில் அக்கட்சி இன்று தமிழகத்தின் ஆளுங்கட்சியாகவும் உள்ளது. அதனால் அடுத்த முதலமைச்சர் பொறுப்பிற்கும் அவருடைய பெயர் முன்மொழியப் படலாம். அவ்வாறு இல்லையெனினும், முதலமைச்சரையும் கட்டுப்பத்தும் அதிகாரம் அப்பதவிக்கு உண்டு.
 
யாரை வேண்டுமானாலும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் கட்சித் தலைவராகவும், அதன் வழி தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்கள். இருப்பினும் சட்டத்தை மீறிய பொது அறத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பொதுத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று, அதன் பின் முதலமைச்சராக அமர்வதே நியாயம்.
 
தங்கள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளரை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுப்பதே சரியானது. ஆதலால் தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒரு பொதுத் தேர்தல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்