தினகரன் ஒத்துழைப்பு தர வேண்டும் - என்ன சொல்கிறார் தம்பிதுரை?

புதன், 19 ஏப்ரல் 2017 (11:29 IST)
அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணங்களுக்கு தினகரன் ஆதரவு தர வேண்டும் எனக் கூறி, மறைமுகமாக அதிமுகவிலிருந்து வெளியேறுமாறு தினகரனுக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
ஜெ.வின் மரணத்திற்கு பின் ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த போதே, கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என ஊடகங்களில் கூறி, சசிகலாவை முதல்வராக்க விரும்பியர் தம்பிதுரை. அதன்பின், சசிகலாவை எதிர்த்து ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், சசிகலா அணியில் இருந்து கொண்டு ஓ.பி.எஸ்-ற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். தற்போது வரை தினகரனுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று இரவு கூடிய கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்க இருக்கிறோம் என அதிரடியாக முடிவெடுத்தனர். மேலும், ஓ.பி.எஸ் அணியோடு பேச்சு வார்த்தை நடத்தி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என கூறினர். தினகரனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் திரும்பியிருப்பது, தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி டெல்லியில் இருக்கும் தம்பிதுரை கருத்து தெரிவித்த போது “ அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் மக்களின் மனநிலை இதுதான் என ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார். நானும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட. எனவே, இதற்கு ஏற்றார் போல் தினகரன் முடிவெடுப்பார் என நம்புகிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.
 
எனவே, அதிமுகவிலிருந்து தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்கிற அமைச்சர்களின் கருத்தையே அவரும் தெரிவிக்கிறார் என்பது தெளிவாகிறது. இத்தனை நாட்களாய் தினகரன் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த தம்பிதுரை தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது, தினகரன் தரப்பிற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்