ஆர்.கே.நகரில் பெருகும் எதிர்ப்புகள் ; மக்கள் சராமரி கேள்வி - அதிர்ச்சியில் தினகரன்

செவ்வாய், 28 மார்ச் 2017 (11:58 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிடிவி தினகரன் செல்லும் இடம் தோறும் அந்த பகுதி மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாவது தெரிய வந்துள்ளது.


\

 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் தினகரன், தற்போது அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் உடன் செல்கின்றனர். மேலும், அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 50 ஆயிரம் நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், பிரச்சார வேனில் தினகரன் தெரு தெருவாக செல்லும் போது, அப்பகுதி மக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
 
வெள்ளம் சூழ்ந்த போது, நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். எங்கள் வீட்டிலிருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டடன. ஒரு வீட்டிற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் செலவானது. ஆனால், அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. உங்கள் கட்சிகாரர்கள் எங்களுக்கு ஆறுதல் கூட வரவில்லை. இப்போது ஓட்டு கேட்க மட்டும் நீங்கள வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
 
அதேபோல், வேறு சில பகுதிக்கு தினகரன் செல்லும் போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள், இந்த தொகுதி மக்களை அரசு கண்டுகொள்ளவே இல்லை என சிலர் வேதனை தெரிவித்தனர். 
 
மேலும், அந்த பகுதி மக்களுக்கு வீடு கட்டி தரப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அவர் மறைவிற்கு பின் அந்த கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அது குறித்தும் அந்த பகுதி மக்கள் தினகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
இது கண்டு அதிர்ச்சியடைந்த தினகரன், ஜெ.வின் திட்டங்கள் மற்றும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார். மேலும், அவருடன் வந்தவர்களும் அவர்களை சமாதானப்படுத்தினர். 
 
இப்படி பிரச்சாரத்திற்கு செல்லும் வழி தோறும், மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருவது தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்