ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ராம மோகன்ராவ்: பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:05 IST)
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராம மோகனராவ் தான் ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறினார். மேலும் சோதனை நடத்துவதற்காக வாரண்டில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் தன்னுடைய மகன் பெயர் தான் உள்ளது என்றார். அதை வைத்துக்கொண்டு எப்படி தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த முடியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் ராணுவம் தலைமைச் செயலகத்தில் நுழைந்திருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.


 

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவ்ர் கூறுகையில்,

அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள போது ராணுவத்தை கொண்டு வருமான வரி சோதனை நடந்தது என்பது ஊழலை ஒழிப்பதற்காக மட்டுமே. இந்த சோதனையை அ.தி.மு.க. எதிர்ப்பது சரியல்ல. இதுகுறித்து அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அறிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனை மத்திய அரசு நடத்திய சோதனை என்று அவர் கூறி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

இந்த சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களாகவே சோதனை நடத்துகிறார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்திருந்தால் இந்த சோதனைக்கு ஒத்துழைப்பை தந்து இருப்பார், எதிர்ப்பை தெரிவித்திருக்க மாட்டார்.

தவறு செய்த நபர்களை மத்திய அரசு சும்மா விடாது. ராமமோகன்ராவ், தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. மற்றும் அரசு அதிகாரிகளுடன் பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் நல்லவர்கள். ஊழலுக்கு துணை போனவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அது அதிகாரிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.

சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்