தீபா வேண்டாம்; முடிவெடுத்த ஓ.பி.எஸ் அணி - பின்னணி என்ன?

வெள்ளி, 3 மார்ச் 2017 (11:51 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என ஓ.பி.எஸ் தரப்பு அணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் 11 எம்.பி.க்கள், 10 எம். எல்.ஏக்கள், அமைச்சர் மாஃபா பாண்டியரஜன் மற்றும் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர். மக்கள் ஆதரவும் ஓ.பி.எஸ் பக்கம் திரும்பியது. 
 
அந்நிலையில், ஏற்கனவே சசிகலாவின் தலைமையை எதிர்த்து, அரசியலில் களம் இறங்க முடிவெடுத்திருந்த தீபா, எந்த அரசியல் முடிவையும் அறிவிக்காமல் இருந்தார். திடீரெனெ ஜெ.வின் சாமதிக்கு சென்று ஓ.பி.எஸ்-ஐ சந்தித்தார். தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
அதன்பின் சட்டபையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்தெடுக்கப்பட்டதால் ஓ.பி.எஸ் அணி தோல்வியை தழுவியது. எனவே, ஓ.பி.எஸ் அணிக்கு செல்வதை விட தனித்து செயல்படுவதே நமக்கு நல்லது என தனது ஆதரவாளர்கள் கூறியயை தீபா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. மேலும், ஓ.பி.எஸ் அணிக்கு தான் வர வேண்டுமெனில், முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய இரு முக்கிய பதவிகளை தீபா கேட்டதாக கூறப்படுகிறது. இதை ஏற்க ஓ.பி.எஸ் அணி மறுத்துவிட்டதால், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி அதற்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் தீபா.
 
எனவே, தீபாவை மீண்டும் தங்களது அணியில் இணைக்க ஓ.பி.எஸ் ஆர்வமாக இருந்தாலும், அதை அவரின் அணியில் இருக்கும் அவரின் ஆதரவாளர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஏனெனில், சசிகலா பதவி நியமனம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள புகாரை தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால், தலைமை பொறுப்பு கண்டிப்பாக ஓ.பி.எஸ்-ற்கே கிடைக்கும் என அவர்கள் திடமாக நம்புகின்றனர். 
 
மேலும், அரசியலில் எப்படி செயல்படுவது என தீபாவிற்கு தெரியவில்லை எனவும், தற்போதைக்கு அவரை விலக்கியே வைப்போம் என்கிற முடிவில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்