மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் மீண்டும் சந்திப்பு - திமுகவில் இணைகிறாரா அழகிரி?

வெள்ளி, 4 நவம்பர் 2016 (12:29 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருப்பதால் அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் சமீபத்தில் கூறப்பட்டு அது தொடர்பாக அறிக்கையும் விடப்பட்டது.
 

 
கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார் என்றும், அவர் ஓய்வெடுக்க கூறி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டதால், பார்வையாளர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது தந்தை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசிவிட்டுச் சென்றார். அப்போது, உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும், விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், மீண்டும் கருணாநிதியை கோபாலபுரத்தில் சந்தித்து உள்ளார். மு.க.அழகிரி - கருணாநிதி இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மு.க.அழகிரி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதும், மு.க. ஸ்டாலினே என் அரசியல் வாரிசு. மு.க.அழகிரியை நினைத்து ஏங்கவில்லை என்று வெளிப்படையாக சமீபத்தில் கருணாநிதி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்