இன்னும் 3 மாதம்தான் ; தமிழகத்தை குறி வைக்கும் மோடி - அதிர்ச்சியில் அதிமுக
புதன், 8 மார்ச் 2017 (15:22 IST)
உத்தரப்பிரதேச தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் மீது கவனம் செலுத்த பாஜக மேலிடம் முடிவெடுத்திருப்பதால், அதிமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
ஜெ.வின் மறைவிற்கு பின், அவருக்கு இணையான தலைவர் இல்லாத காரணத்தினால், அதிமுக தள்ளாடி வருகிறது. போதாக்குறைக்கு, சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியிருப்பதால், அதிமுவில் பிளவு ஏற்பட்டு இரண்டு அணியாக பிரிந்துள்ளது. சசிகலாவின் தரப்பு கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், எத்தனை மாதத்திற்கு அவர் முதல்வராக நீடிப்பாரோ என்ற ஸ்திரமற்ற நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் தேர்தல் முடிந்த பின்பு, தமிழ்நாட்டை நோக்கி பாஜக-வின் கவனம் திரும்பும் எனக் கூறப்படுகிறது. அந்த தேர்தலில் கவனம் செலுத்தியதாலேயே, கடந்த 3 மாதங்களாக தமிழகத்தின் மீது மோடி கவனம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதைப் பயன்படுத்தியே சசிகலா தரப்பு தங்களுக்கு சாதகமான சில காரியங்களை செய்து முடித்துக் கொண்டதாக தெரிகிறது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஈஷா யோக மைய விழாவில் கலந்து கொள்ள வந்த மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுடன், தமிழக அரசியல் பற்றி விரிவாகவும், தீவிரமாகவும் விவாத்தார். எனவே, உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் களத்தை நோக்கி பாஜக காய்நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, சசிகலாவின் குடும்பத்தினர் கையில் அதிமுக சிக்கியிருப்பதை விரும்பாத மோடி, அவர்களுக்கு எதிராக சில அஸ்தரங்களை பயன்படுத்துவார் எனவும், டி.டி.வி தினகரன் மீதான அந்நிய செலவாணி தொடர்பான வழக்குகள், சேகர் ரெட்டியின் மீது நடத்தப்பட்ட சோதனை உள்ளிட்டவை சூடுபிடிக்கும் எனவும் பாஜக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். முடிந்தால் இன்னும் 6 மாதத்திற்குள் ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை கொண்டு வரும் முடிவில் பாஜக மேலிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஓ.பி.எஸ் அணியின் எதிர்ப்பு, ஜெ. மர்மம் குறித்த விசாரணை கோரிக்கை, உள்ளாட்சி தேர்தல், சசிகலா தரப்பிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார், ஊழல் வழக்குகள் என தினகரன் தரப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது,
இந்நிலையில், பாஜக-வின் வீயூகத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் தினகரன் தரப்பு முழித்து வருவதாக தெரிகிறது. எனவே, நாங்கள் உங்களுக்கு எதிரிகள் அல்ல என்கிற தோனியில் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி வட்டாரத்திடம் காய் நகர்த்தி வருகிறாராம். ஆனால், அதற்கு பாஜக வளைந்து கொடுத்தது போல் தெரியவில்லை. எனவே, இன்னும் 3 மாதங்களில் தமிழக அரசியலில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.