முதல்வராக ஓ.பி.எஸ்-ஐ அமர வையுங்கள் - தம்பிதுரையிடம் கோபம் காட்டிய மோடி?

வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:30 IST)
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியின் மீது ஆளும் பாஜக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக முதல்வரக ஓ.பி.எஸ் அறிவிக்கப்பட்டார். பாஜக அரசுடன் முட்டி மோதாமல் இணக்கமாகவே நடந்து கொண்டார் ஓ.பி.எஸ். மேலும், ஓ.பி.எஸ்-ஸின் முதுகில் சவாரி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், 3 மாதங்கள் அவர் முதல்வராக நீடித்த நிலையில், அவரிடமிருந்து முதல்வர் பதவியை சசிகலா தரப்பு பறித்தது. இது பாஜக தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 
 
அதன்பின் அவர் சசிகலா தரப்பினரை எதிர்த்து ஓ.பி.எஸ் களம் இறங்கினார். அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என நம்பிய பாஜக, ஆட்சி அமைக்க அவருக்கு போதுமான நாட்கள் அவகாசம் கொடுத்தது. ஆனால், நினைத்தது நடக்கவில்லை. எனவே, சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். 
 
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் அணி செய்த களோபரத்தில் இரட்டை இலை சின்னமும், அதிமுக என்கிற கட்சியின் பெயரும் தினகரனிடமிருந்து பறிக்கப்பட்டது. தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரில், தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் கமிஷன். 


 

 
மேலும், தினகரனுக்கு வலது கரமாக செயல்பட்டு வந்த விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையும் நடத்தினர். பணப்பட்டுவாடாவில் பல அமைச்சர்களின் பெயர் சிக்கியுள்ளதால், அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஒருபக்கம், தமிழகத்தில் விரைவில் ஆட்சி கவிழும் என தமிழிசை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
எனவே, சமீபத்தில் டெல்லி சென்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இதுகுறித்து மோடியிடம் புலம்பியுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரிடமே சோதனை நடத்தினால், ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும். இரட்டை இலை சின்னம் முடக்கம், தேர்தல் ரத்து, வருமான வரி சோதனை என ரவுண்டு கட்டி அடிக்கிறீர்கள். தயவு செய்து கருணை காட்டுங்கள் என்கிற ரேஞ்சில் கெஞ்சினாராம். 
 
அதற்கு பதிலளித்த மோடி, ஓ.பி.எஸ்- ஐ முதல்வராக அமர வையுங்கள். கட்சியை நீங்கள் நடத்துங்கள். நான் சொல்வதை கேட்டால் சிக்கல் இல்லாமல் ஆட்சி நடக்கும். இல்லையேல் இதையெல்லாம் நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும் என எகிறினாராம்.


 

 
இதுபற்றி தினகரனிடம் தெரிவிக்கப்பட, மோடி சொல்வதை கேட்க முடியாது. அவர்கள் செய்வதை செய்யட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற ரேஞ்சில் பதில் அளித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மிரட்டும் பாஜக தரப்பிடம் பணிந்து போகாமல் தினகரன் செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்