அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கமா?

புதன், 12 ஏப்ரல் 2017 (06:09 IST)
ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்தவைகளில் ஒன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு. இந்த ரெய்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் பலர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்ததால் இந்த தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



 


இந்த நிலையில் வருமானவரித்துறையினர்களின் வளையத்தில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அப்ரூவர் ஆவார் என்றும், கைது செய்யப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் மும்பையில் இன்று காலை 11.30-க்கு, திமுக உறுப்பினர்கள் 5 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என தெரிகிறது.

இந்நிலையில்  தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கரை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. கவர்னர் நடவடிக்கை எடுக்கும் முன்பே தமிழக அரசு விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்