ஜெயலலிதா பொதுச் செயலாளராக யாரை நியமிக்க சொன்னார்?: ஓ.பி.எஸ் அதிரடி தகவல்

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (23:14 IST)
அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 

 



 
தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்தேன். ஜெயலலிதா நோய்வாய்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 70 நாட்களுக்கு பிறகு அவர் என்னிடம் சில விசயங்களை சொன்னார்.
 
பொதுச்செயலராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின், திவாகரன் என்னிடம் வந்து சசிகலாவை பொதுச்செயலராக ஆக்க சொன்னார். அதற்காக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சசிகலாவும் ஏற்றுக்கொண்டார்.
 
நான் செய்த நற்பணிகள் சிலருக்கு எரிச்சலுாட்டியது. சசிகலா முதலமைச்சராக வேண்டும் என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் என்னிடம் கூறினார். எனது அமைச்சரவையில் இருக்கும் வேறொருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்றார். என்னை வைத்துக்கொண்டு ஏன் அவமானப்படுத்த வேண்டும்?” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்