தமிழ்நாட்டில் என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை : பாஜகவிடம் கதறிய சசிகலா புஷ்பா
சனி, 20 ஆகஸ்ட் 2016 (09:20 IST)
தமிழ்நாட்டில் தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி, பாஜகவின் ஆதரவை பெற அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காய் நகர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் அதிமுக தலைமை தன்னை பதவி விலக வற்புறுத்தியதாகவும், அடித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து கட்சியில் இருந்து சசிகலா புஷ்பா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அடங்கி போவார் என எதிர்ப்பார்த்தால், தொடர்ந்து பேட்டிகள் கொடுத்தும், பாதுகாப்பு கேட்டும், வழக்கு தொடர்ந்தும் மோதல் போக்கிலே இருந்தார்.
இதனையடுத்து சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது. சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பகீர் குற்றச்சாட்டுகளை வைத்து புகார் அளித்தனர். இதனையடுத்து சசிகலா புஷ்பா தனக்கு முன் ஜாமீன் வாங்கி கொண்டார்.
வரும் 22-ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது. சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை நிராகரித்த சசிகலா புஷ்பா, தற்போது பாஜகவின் ஆதரவை பெற முயன்றுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை அதிமுகவிற்கு எதிராக பயன்படுத்த பாஜக திட்டமிட்டமிருப்பதாகவும், எனவே சசிகலா புஷ்பாவிற்கு அக்கட்சி உதவ முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த சசிகலா புஷ்பா ‘தமிழ்நாட்டிற்கு சென்றால் என்னை கொலை செய்து விடுவார்கள். எனவே என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன்’ என்று அழுது புலம்பியுள்ளாராம். அவருக்கு ஆறுதல் கூறிய அத்தலைவர் “ பயப்படவேண்டாம். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம்” என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுளது.
காங்கிரஸ், பாஜக என்று தன்னுடைய ஆதரவு வட்டாரங்களை பெருக்கி வரும் சசிகலாவின் நடவடிக்கையை அதிமுக தலைமை கூர்மையாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.