'இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படப்போவதில்லை' - ஜெ.தீபா அதிரடி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (13:54 IST)
என்னை பயமுறுத்தி அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை என்று ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் தீபா கூறியுள்ளார்.


 

அரசியல் களத்தில் குதித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இதற்கான நிர்வாகிகள் பட்டியலை நேற்று [பிப்ரவரி 27ஆம் தேதி] அறிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் நிர்வாகிகள் பட்டியலை உறுதி செய்யாததால் 2 அல்லது 3 நாட்களில் முறையாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடத்தில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் குறித்து பேசிய தீபா, ”திட்டமிட்டு இந்த செயலில் சிலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

என்னுடைய ஆதரவாளர்களை எனக்கு எதிராக செயல்படவும், பேசவும் வைத்ததுடன், போலீசாரையும் வரவழைத்துவிட்டனர். இதுபோன்ற செயல்களை அரங்கேற்றி என்னை பயமுறுத்தி அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டிற்கு வரும் அவரது ஆதரவாளர்கள் கூடி நிற்கக்கூடாது என்று காவல் துறையினர் கூறியது குறித்து கேட்டபோது, “என் வீட்டுக்கு உள்ளே வர எவரையும் அனுமதிக்க முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடமே கூறுகின்றனர். என் வீட்டுக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்று எனக்கு தெரியும்.

என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அரைமணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கூறுகின்றனர். என் வீட்டில் உள்ளவற்றையும், அருகில் உள்ள வீடுகளில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள பேனர்களையும் அப்புறப்படுத்த சொல்வது சரியல்ல. இதுபோன்று காவல்துறை அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. என் வீட்டுக்கு பாதுகாப்பும் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்