சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் இனைந்து மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்த் உட்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். தேமுதிகவின் வாக்கு எண்ணிக்கையும் அதள பாதாளத்திற்கு சென்றது.
அதன்பின், தேமுதிக சந்தித்த தோல்வி பற்றி விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி பணிகளில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீப் ஆகியோரின் தலையீடு அதிகமாக இருக்கிறது மேலும் பிரேமலதாவின் தவறான கூட்டணி முடிவுதான் தோல்விக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, எந்த முடிவானாலும் நீங்களே எடுங்கள் என்று அவர்கள் விஜயகாந்தை வற்புறுத்தினார்கள். மேலும், இதுவரை 17 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள் தேமுதிகவிலிருந்து விலகி திமுக, அதிமுக போன்ற கட்சிகளிள் இணைந்துவிட்டனர். இன்னும் சிலரை வெளியே இழுக்க, மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அதேபோல், கட்சி பணியிலிருந்து பிரேமலதா விலகி உள்ளார். சமீபத்தில் தேமுதிக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் கூட பிரேமலதா பங்கேற்கவில்லை. கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து அவர் இனி விலகி இருப்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.