விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட தேதி குறிக்கும் கட்சியினர்

புதன், 8 ஜூன் 2016 (16:27 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு மற்றும் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட தேமுதிகவினர் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வலம் வருகின்றன.


 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என முடிவெடுத்து படு தோல்வியடைந்தார் விஜயகாந்த். விஜயகாந்தை நம்பி தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களின் நிலமை பரிதாபமாகி விட்டது.
 
தேர்தலில் போட்டியிடுங்கள் தோற்றால் பணத்தை திருப்பி தருகிறேன் என விஜயகாந்த் வாக்குறுதி அளித்ததால் தான் தேர்தலில் போட்டியிட்டோம் என தோல்வியுற்று சொத்துக்களை இழந்து நிற்கும் வேட்பாளர்கள் புலம்புகின்றனர்.
 
தோல்விக்கு பின்னர் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் தரப்படும் என விஜயகாந்த் கூறியதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் யாருக்கும் பணம் தரமுடியாது என விஜயகாந்த் கையை விரித்துவிட்டதாகவும், பணம் தொடர்பாக தலைமை அலுவலகத்தையும், விஜயகாந்தையும் தொடர்பு கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் விஜயகாந்தை நம்பி சொத்துக்களை விற்று தேர்தலை சந்தித்த வேட்பாளர்கள் ஒன்று கூடி விஜயகாந்தின் வீட்டையும், தலைமை அலுவலகத்தையும் முற்றுகையிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
 
விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தால் தான் பணம் கிடைக்கும் என தோல்வியுற்ற வேட்பாளர்கள் நினைக்கின்றனர். எப்போது சென்னைக்கு வந்து இந்த முற்றுகை போராட்டத்தை நடத்தலாம் என விவாதித்து வருகின்றனர் தேமுதிக வேட்பாளர்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்