தீபா இல்லையேல் திமுக : கட்சியிலிருந்து விலகும் அதிமுகவினர்

திங்கள், 2 ஜனவரி 2017 (11:03 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாத சில அதிமுகவினர் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார்கள்.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அடிமட்ட அதிமுக தொண்டர்களில் பலர் சசிகலாவை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை.
 
எனவே, அவர்களில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என தமிழகத்தின் பல இடங்களிலும் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் தீபா பெயரில் பேரவையும் தொடங்கப்பட்டு, அதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது.


 

 
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 
 
அதன் பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது “ தீபா அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வரவில்லை எனில், நாங்கள் அனைவரும் அதிமுக-விலிருந்து விலகி திமுக அல்லது பாஜக போன்ற கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளோம்.  இதை தீபா உணர்ந்து விரைவில் அரசியலில் ஈடுபட வேண்டும்” என அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்