தீபா எடுத்த அதிரடி முடிவு : தடுக்க துடிக்கும் சசிகலா குடும்பத்தினர்?

சனி, 7 ஜனவரி 2017 (08:56 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று, அவரின் அண்ணன் மகள் தீபா புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமரவைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
 
சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுக தொண்டர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கும் செல்லும் அவர்கள் அவரை நேரில் பார்த்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 
அவர்களிடம் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருகிறேன். பொறுமையாக இருங்கள் என நம்பிக்கையாக பேசி வருகிறார் தீபா.  அதிமுக தொண்டர்கள் மத்தியில் தனக்கு ஆதரவு அதிகரிக்கும் போது அரசியலுக்கு வரலாம் என அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதுவரை தனிக்கட்சி தொடங்குவதற்கான வியூகங்கள் அமைப்பது பற்றி அவர் யோசித்து வருவதாக தெரிகிறது. மேலும், சசிகலாவின் தலைமை பிடிக்காத சில முக்கிய அதிமுக நிர்வாகிகளும் அவருடன் கைகோர்த்திருப்பதாக தெரிகிறது. எனவே அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.
 
வருகிற பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அன்று ஜெ.வின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் தீபா, அன்றே தனது புதிய கட்சி குறித்து அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்குவதை தடுக்கும் முயற்சியில் சசிகலா தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அது, சமாதானப் பேச்சுவார்த்தையில் தொடங்கி மிரட்டல் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்