விவசாயிகள் போராட்டத்திற்கு அதிர்ச்சி ஆகாத அமைச்சர் இளையராஜாவுக்கு மட்டும் அதிர்ச்சி அடைவது ஏன்?

திங்கள், 20 மார்ச் 2017 (23:20 IST)
கடந்த ஒருவாரமாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.



 


இந்நிலையில் இளையராஜா -எஸ்பிபி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'இந்த பிரச்சனை குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவது குறித்த பிரச்சனையை இருவரும் பேசி நல்ல விதமாக சரிசெய்ய வேண்டும் என்றும் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடுவின் இந்த கருத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக இணையதள பயனாளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெல்லியில் ஏழு நாட்களாக விவசாயிகள் குளிரிலும், வெய்யிலிலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதுகுறித்து இதுவரை வாய்திறக்காத வெங்கையா நாயுடு, இளையராஜா சர்ச்சை குறித்து மட்டும் கருத்து தெரிவித்து இருப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி மேல் கேட்டு வருவதால் அமைச்சர் தரப்பு தர்மசங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்