உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள் : சசிகலாவிற்கு செக் வைத்த பாஜக?

வியாழன், 2 பிப்ரவரி 2017 (13:56 IST)
வருகிற உள்ளாட்சி தேர்தலில் உங்களை நிரூபித்து காட்டுங்கள் என அதிமுகவிற்கு, பாஜக செக் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை, எப்படியாவது முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரின்  கணவர் நடராஜன் மற்றும் உறவினர்கள், சில அதிமுக அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.  அதற்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழி விட வேண்டும். ஆனால், அவரோ யாரையும் பகைத்து கொள்ளாமல், முதல்வர் பணியை அமைதியாக செய்து வருகிறார். 
 
ஒருபக்கம் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு அதிகரித்து வரும் ஆதரவும் சசிகலா வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக தெரிகிறது. மறுபக்கம் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் தீர்ப்பு என்னவாகுமோ என்ற அச்சத்தில் சசிகலா இருக்கிறார். இந்நிலையில், அந்நிய செலவாணி தொடர்பான வழக்கும் சசிகலா மீது மீண்டும் திரும்பியுள்ளது. 
 
மத்திய அரசு நெருக்கடி தருவதை உணர்ந்த சசிகலா தரப்பு, அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்று வருவதாகவும், ஆனால், பாஜக மேலிடம் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் நழுவி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜக, இனி வரும் தேர்தலில் திமுக அல்லது அதிமுக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. திமுகவிடம் பாஜகவின் உறவு நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், அதிமுகவை பொறுத்த வரை, ஓ.பி.எஸ் ஒருபுறம் மற்றும் சசிகலா தரப்பு ஒருபுறம் என இரண்டு தலைமைகளில் அதிமுக செயல்படுவதை பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது. 
 
எனவேதான், ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச டெல்லிக்கு சென்ற தம்பிதுரை உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதை போயஸ் கார்டன் தரப்பு நன்றாகவே உணர்ந்துள்ளது. இந்நிலையில், உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், வருகிற உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டுங்கள் என சசிகலா தரப்பிடம் பாஜக கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்