ஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி (வீடியோ)
புதன், 21 டிசம்பர் 2016 (15:52 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் சமீபத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையேற்றார்.
இந்த கூட்டத்தில் முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மெளனம் கடைபிடித்த நிலையில் மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கைபரப்பு செயலாளருமான தம்பிதுரையின் உதவியாளர் முகம்மது சாதிக் என்பவர் சிரித்த படி நையாண்டி செய்து கொண்டிருந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த அ.தி.மு.க வினரையும் கதிகலங்க வைத்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய பாஸ்கர், சின்னம்மா என்கின்ற சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஆக்கியே தீருவோம் என்று சபதம் இட்டார்.
அ.தி.மு.க-வின் ஆகம விதிகளின் பிரகாரம் எல்லோரும் சோர்ந்த நிலையில் பேட்டி கொடுத்த வந்த நிலையில், இவர் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு பேட்டி அளித்தார்.
இதனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க வில் என்ன நடக்கின்றது என்பது புரியாத புதிராக உள்ளது என உண்மையான அ.தி.மு.க-வினர் வருத்தத்துடன் கூறினர்.
மக்களவை துணை சபாநாயகரின் உதவியாளர் அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அ.தி.மு.க அலுவலகத்திற்குள் சின்னம்மாவை பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஆக்குவோம் என்று கூறிய நிலையிலேயே அங்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திலேயே சின்னம்மா என்கின்ற சசிகலாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.