ஈரோடு பகுதியில் பகுதியில் விளைந்து நெற்பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள், இயந்திரங்கள் பற்றாக்குறையால் விளைந்த நெற்பயிர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்க சொந்தமான நெற்பயிர் அறுவடை இயந்திரம் பயனின்றி சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டு அனாதையாக நிற்கின்றது.
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டது. நடவு செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக நிற்கிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து மஞ்சள் அறுவடைக்காக கர்நாடகா செல்லும் கூலி ஆட்களாலும், அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், நூற்பாலைக்கு செல்லும் ஆட்களாலும் நெற்பயிர் அறுவடைக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.
அறுவடைக்கு இயந்திரம் பயன்படுத்த விவசாயிகள் தயாராக இருந்தாலும் நெற்பயிர் அறுவடை இயந்திரத்தின் வருகைகள் குறைவாக உள்ளதால் இயந்திரமும் பற்றாக்குறையாக உள்ளது.
சத்தியமங்கலம் பகுதியில் இயந்திரம் மூலம் அறுவடை நடத்த கட்டணமாக மணி ஒன்றுக்கு ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய மணி ஒன்றுக்கு கட்டணமாக ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையான நெற்பயிர் அறுவடை இயந்திரங்கள் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டது. இதுவே சத்தியமங்கலம் பகுதியில் நெற்பயிர் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறைக்கு காரணமாகும்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு சொந்தமான நெற்பயிர் அறுவடை இயந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த இயந்திரம் எங்கு இருக்கிறது என்று வேளாண்மை அதிகாரிகளுக்க தெரியுமா? என்பது சந்தேகமே.
webdunia photo
WD
காரணம் தற்போது இப்பகுதியில் முக்கியமாக தேவைப்படும் இந்த நெற்பயிர் அறுவடை இயந்திரம் சத்தியமங்கலத்தில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் உள்ள செண்பகபுதூரில் மாரனூர் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
நெற்பயிர் அறுவடை இயந்திரத்தின் விலை ரூ.17 லட்சம் ஆகிறது. இவ்வளவு மதிப்புள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான நெற்பயிர் அறுவடை இயந்திரம் எவ்வித பாதுகாப்புமின்றி அனாதையாக ஒரு பொது இடத்தில் நிற்கவைத்து அந்த இயந்திரம் அழியும் நிலையில் உள்ளதை பார்க்கும்போது இப்பகுதி விவசாயிகள் கொதிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த இயந்திரத்தை வேளாண்மைதுறை இப்படி வைத்திருப்பது சரியா என்று வேளாண்மை அதிகாரிகளே நினைத்து பார்க்கவேண்டும் என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள். செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இல்லாமல் அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எண்ணம். நிறைவேற்றுவார்களா வேளாண்மைத்துறை அதிகாரிகள். பொறுத்திருந்து பார்ப்போம்!