தமிழகம் - 2015: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

புதன், 30 டிசம்பர் 2015 (13:03 IST)
2015 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்.


 

 
எம்எஸ்வி என்று அழைக்கப்படுவபர் எம்.எஸ்.விஸ்வநாதன் (மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்) 
 
தமிழ் சினிமாவின் மாபெரும் சொத்தாகக் கருதப்பட்ட இவர் 1,700 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.விசுவநாதன் ராமமூர்த்தியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார், தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
 
எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு அருகிலுள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
 
இவரது தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம.கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
 
இவர், கவிஞர் கண்ணதாசனுடன் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அவரது ஏராளமான படல்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
எம்.எஸ்.வி அவர்கள் இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன் ஆகிய மூன்று படங்களுக்கு இசையமைத்தார்.
 
"நீராடும் கடலுடுத்த..." எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு மோகன ராகத்தில் இசையமைத்த பெருமை கொண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
 
இந்நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தனது 87 ஆவது வயதில், ஜூலை 14 ஆம் நாள் அதிகாலை 4.15 மணிக்கு உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து, சென்னை சாந்த்தோமில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
மறுநாள் (ஜூலை 15 ஆம் தேதி) முற்பகல் விஸ்வநாதனின் உடல் இசைமுழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்