தமிழகம் - 2015: புகழ்பெற்ற நடிகை 'ஆச்சி' மனோரமா காலமானார்

ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (12:58 IST)
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை 'ஆச்சி' மனோரமா உடல்நலக் குறைவால் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் காலமானார்.


 

 
கோபிசாந்தா என்னும் இயற்பெயரைக் கொண்ட மனோரமா 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில், தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.
 
வறுமை மற்றும் குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
 
தன்னுடைய படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார்.
 
இந்நிலையில், அவரது தாயரிருக்கு ரத்தப்போக்கு ஏற்படட்டதால், தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பராமரித்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
 
அப்போது, ஒரு நாள் அவருடைய ஊரில் "அந்தமான் காதலி" என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தனர். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.
 
இதைத் தொடர்ந்து, அவர் நாடகத்தில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது நாடக இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை "மனோரமா" என்று மாற்றினர்.
 
இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய மனோரமா, "நாடக உலக ராணி" என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். இந்நிலையில், "வைரம்" நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
 
அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் "இன்ப வாழ்வு" என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். அந்தப் படத்தில் மனோரமா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் "ஊமையன் கோட்டை" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விட்டதால், மிகவும் மனமுடைந்து போனார் மனோரமா.

எனினும், கண்ணதாசன், 1958 ஆம் ஆண்டு "மாலையிட்ட மங்கை" என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக திரைத்துறையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகையாகவும், கதாநாயகியாகவும், குணச்சித்தர நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றார் மனோரமா.
 
இவர் 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகினராலும், ரசிகர்களாலும் "ஆச்சி" என்று அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்து புகழ்பெற்ற நடிகை ஆவார்.

திரையுலகம் தந்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ராமா ராவ் என ஐந்து முதலைமச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் மனோரமா.
 
மனாரமா சுமார் 5,000 க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம ஸ்ரீ விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
 
அத்துடன், தமிழக அரசின் "கலைமாமணி விருது", "புதிய பாதை"  திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான "தேசிய விருது", மலேசிய அரசிடம் இருந்து "டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது", கேரளா அரசின் "கலா சாகர் விருது", "சினிமா எக்ஸ்பிரஸ் விருது", சிறந்த குணச்சித்திர நடிகைக்காக "அண்ணா விருது", "என்.எஸ்.கே விருது", "எம்.ஜி.ஆர். விருது", "ஜெயலலிதா விருது" மற்றும் பல முறை "ஃபிலிம்ஃபேர் விருதுகள்" என ஏராளமான விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
 
76 வயதுடைய மனோரமா சென்னை தியாகராய நகர், நீலகண்ட மேத்தா தெருவில் நீண்டகாலமாக வசித்து வந்தார்.
 
இந்நிலையில், அவருக்கு, 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 நாள் மூச்சு திணறல் ஏற்பட்டது இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு திரைத்துறையினரும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதனர். அந்த காட்சி மனோரமாவை மக்கள் எவ்வளவு நேசித்தனர் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்