பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிதிஷ்குமார்

திங்கள், 28 டிசம்பர் 2015 (16:57 IST)
அக்டோபர் மாதம் பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி 178 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 


 
 
பீகார் சட்டசபைக்கு மொத்தம் மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்  பலமான கூட்டணி அமைத்து பாஜாக விற்கு எதிராக தேர்தலை சந்தித்தன. 
 
ஆட்சியை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று எல்லா கட்சிகளும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டன. பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு நிதிஷ்குமாரையும், லாலு பிரசாத்தையும் கடுமையாக சாடினார்.
 
காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் நிதிஷ்குமார் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பீகாரில் பிரச்சாரம் செய்தனர். மேலும் நிதிஷ்குமார் கூட்டணிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அறிக்கைகள் மூலம் ஆதரவு வழங்கினர். லாலுபிரசாத் இந்த தேர்தலில் தனது இரண்டு மகன்களையும் களம் இறக்கினார்.
 
மோடியின் பிரச்சாரத்தை பற்றி கருத்துக்கூறிய நிதிஷ்குமார் “எனக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆனால், பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தரம் தாழ்ந்து பேசுகிறார். இது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. மோசமான செயல் ஆகும்.
 
தனது பேச்சை மூலதனமாக வைத்து பீகார் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய பிரதமர் நரேந்திரமோடி நினைக்கின்றார். அவரது கனவு பலிக்காது. பீகார் மக்கள் மனதில் எனக்கு மட்டுமே நிரந்தர இடம் உண்டு. பீகாரில் வெற்றி பெற நினைக்கும் நரேந்திர மோடியின் முயற்சியும் பலிக்காது. கனவும்  பலிக்காது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது போல பீகாரிலும் பாஜக தோல்வி அடையும்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
மேலும், டைம்ஸ்நௌ பத்திரிக்கை பீகாரில் நடத்திய கருத்துக் கணிப்பில், நிதிஷ்குமார்-லாலு கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தெரிவிக்கப்பட்டது.
 
தேர்தல் முடிந்து நவம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் முன்னிலை வகித்த பாஜக அதன் பின் பின்னுக்குப் போனது. லாலு-நிதிஷ் கூட்டணியே முன்னிலை வகித்தது. முடிவில், நிதிஷ் குமார் - லாலு தலைமையிலான கூட்டணி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களில் வெற்றி பெற்றது. லாலு பிரசாத்தின் இரண்டு மகன்களும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.


 

 
பாரதீய ஜனதா தனது தோல்வியை ஏற்றுக்கொண்டது. மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிய பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, பீகார் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்று கருத்து கூறினார்.
 
அந்த தேர்தலில் மொத்த கட்சிகள் பெற்ற வெற்றிகள் :-
 
 ராஷ்டீரிய ஜனதா தளம் - 80
ஐக்கிய ஜனதா தளம் - 71
காங்கிரஸ் - 27
பாஜக - 53
ராஷ்டீரிய லோக் சமதா கட்சி - 2
கம்யூனிஸ்ட் (மா.லெ) விடுதலைக் கட்சி - 3
லோக் ஜனதா சக்தி கட்சி - 2
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா - 1
சுயேட்சை வேட்பாளர்கள் - 4
 
இந்த மகத்தான வெற்றியின் மூலம், நிதிஷ்குமார் பீகாரின் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 4வது முறையாக நவம்பர் 20ஆம் தேதி பதிவியேற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரின் வயது 24. வெறும் 9ஆம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 
 
கடந்த பாராளுமன்றா தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக-விற்கு, பீகார் சட்டமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி தேசிய அளவில் பெரும் சறுக்கலாக அமைந்தது. இந்த தோல்வி மூலம் இந்தியாவில், மோடியின் அலை ஓய்ந்துவிட்டதாக பாஜக அல்லாத கட்சிகள் கருத்து தெரிவித்தன. 

வெப்துனியாவைப் படிக்கவும்