நெஸ்லே மேகிக்கு தடை வந்ததும் விலகியதும்

திங்கள், 28 டிசம்பர் 2015 (15:47 IST)
சுவிஸ் நாட்டை சேர்ந்த ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.


 

 
நெஸ்ட்லே மேகி நூடுல்ஸில் சுவை அதிகரிக்கும் எம்.எஸ்.ஜி., எனப்படும் அஜினோமோட்டோ உப்பை அதிகமான அளவு சேர்த்து விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றாசாட்டு எழுந்தது. மேலும் மேகியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு காரியம் கலந்திருப்பதாக கடந்த 2015 ஜூன் மாதம் பரபரப்பு புகார் எழுந்தது. 
 
இதனை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவின்படி, தில்லி, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், கேரளா, குஜராத், தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸை திரும்பப்பெற ‘நெஸ்ட்லே’ நிறுவனம் முடிவு செய்தது. மேலும், மேகி நூடுல்ஸின் 9 வகையையும் திரும்பப் பெற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டது.
 
இந்தியாவில் மேகி நூடுல்ஸின் 9 வகையான உணவுகள் சாப்பிட பாதுகாப்பற்றவை. எனவே, உடனடியாக இவற்றை தயாரிக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. தயாரிப்பு, ஏற்றுமதி, பங்களிப்பு மற்றும் விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டது.
 
நெஸ்லே நிறுவனத்தின் மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த மகராஷ்டிர அரசு, மும்பையிலும் மேகி விற்பனைக்கு தடை விதித்தது. 
 
அதன்பின், நெஸ்லே இந்தியா நிறுவனம், மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு தரப்பு, ’நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி உணவுப் பொருளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வேகவேகமாக அந்த நிறுவனம் அழித்துவிட்டது’ என்று கூறியிருந்தது.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை மேகி நிறுவனம் மறுத்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’மேகி தயாரிப்பு ஆபத்தானதல்ல. மராட்டிய மாநில மேகி பாக்கெட்டுகள் அனைத்தும் தீங்கானவை அல்ல என்றும் சில பாக்கெட்டுகள் கெட்டுப் போயிருக்கலாம்’ என்றும் கூறியிருந்தார்.
 
அந்நிலையில், மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், மேகி நூடுல்ஸின் தரம் குறித்த புதிய ஆய்வை நடத்தவும் உத்தரவிட்டது. அதனையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ்களில் ரசாயனங்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பது சோதனைகளில் தெரியவந்தது. 
 
அதனால், மேகியின் மீதிருந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 2015 நவம்பர் மாதத்திலிருந்து தனது மேகி விற்பனையை மீண்டும் துவங்கியுள்ளது நெஸ்லே நிறுவனம்.
 
ஆனால் ஒரு முறை தடை வந்து விட்டதால், மக்கள் மீண்டும் மேகியை வாங்குவதற்கு தயங்குவதால், மேகி விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்