கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை

திங்கள், 28 டிசம்பர் 2015 (16:01 IST)
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் அவர் வீட்டிலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


 

 
இந்து மதவெறி வகுப்புவாதம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்த முக்கிய எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என பலர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வரிசையில் கன்னட எழுத்தாளர் கல்பர்கியும் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  
 
புரட்சிகர கன்னட எழுத்தாளராக திகழ்ந்த எம்.எம்.கல்பர்கி கன்னடத்தில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கன்னட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு எழுதிய “மார்கா ” என்ற தலைப்பில் வெளியிட்ட 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பிற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் பம்பா, ருபதுங்கா போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.
 
இவர் இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை நீண்ட காலமாக எழுதியும் பேசியும் வந்தார். இதனால் இந்து அடிப்படை வாதிகளின் தனிப்பட்ட எதிரியாகவே அவர் மாறியிருந்தார். இதற்கு தெரிவித்து ஒருமுறை அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பஞ்ரங் அமைப்பினர், அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதலும் நடத்தினர். ஆனாலும், அவர் தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை. 
 
கல்பர்கி கர்நாடகாவில் உள்ள தர்வாத் எனும் பகுதியில் உள்ல கல்யாண் நகரில் வசித்து வந்தார். 2015 ஆகஸ்டு 30 ஆம் தேதி, இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். ஒருவன் வெளியிலேயே நிற்க, மற்றோருவன் உள்ளே சென்று, அவர்து வீட்டுக் கதவை தட்டியுள்ளான். 
 
கல்பர்கி கதவை திறந்துள்ளார். உடனே அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியல் அவரை சுட்டு விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டான். உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தையும், நாடெங்கும் உள்ள எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியது.  அந்த கொடூர தாக்குதலுக்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் யாரிடம் பகையில்லாமல் வாழ்ந்தவர் கல்பர்கி. எனவே இந்து கடவுளுக்கும் உருவ வழிபாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால், அடிப்படை வாதிகள் யாரோ அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்ற போலிசார் நம்பினார்கள். கர்நாடகாவில் எழுத்தாளர் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. 
 
துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்களை பிடிக்க 6 குழுக்கள் அடங்கிய சிறப்பு விசாரனை குழுவும் அமைக்கப்பட்டது.  அதன் பின் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரனைக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். 
 
அவர்களின் விசாரணையில், அவரது கொலையில் சனாதன் சன்ஸ்தா எனும் இயக்கத்தை சேர்ந்த சமீர்கெய்வாட் என்பவனை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் இந்த தொடர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், மேலும் இந்த படுகொலை செய்யும் குழுவில் ருத்ரபட்டீல் என்பவர் உள்பட பலர் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை ருத்ரபட்டீலை கைது செய்ய முயன்று வந்தனர். 
 
ஆனால் ருத்ரபட்டீல் அவரது நண்பர்களாலேயெ அக்டோபர் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். ருத்ர பட்டீலுக்கு ஏற்கனவே கோவா குண்டு வெடிப்பிலும் தொடர்பு இருந்தது.
 
கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகிய எழுத்தாளர்களின் கொலையிலும் தொடர்புடையவர் என்பது உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில்தான் அவர் நண்பர்களாலேயே சுட்டு கொலை செய்யப்பட்டார்.
 
தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதால் கொதித்தெழுந்த பல எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியதற்கு, கல்புர்கி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவேமே அடித்தளமாக இருந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்