இரண்டாம் முறை டில்லி முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால்

திங்கள், 28 டிசம்பர் 2015 (15:39 IST)
கடந்த 2013 ஆம் ஆணடு இறுதியில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 28 எம்.எல்.ஏக்கள் பெற்ற கெஜ்ரிவால் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சியை பிடித்தார். 49 நாட்கள் பதவியில் இருந்த அவர் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆதரவு தராததால் பதவி விலகினார்.


 
 
அதன் பின் தற்காலிகமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமூலில் இருந்தது. அந்நிலையில் தேர்தல் நடத்தக்கோரி கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய அரசு அமைவது குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கெடுவிதித்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையை கலைத்து தேர்தல் நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். 
 
அதன்மூலம் அங்கு 2015 பிப்ரவரி 7 ஆம் தேதி அங்கு தேர்தல் மீண்டும் நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தான் இன்னொரு முறை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன். அந்த தவறை இனி செய்ய மாட்டேன் என்று டில்லி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். 
 
டில்லியில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் மீது மக்களுக்கு இருந்த கோபம், அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டில்லி முதல்வராக்கியது.  அந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பாண்மையுடன் கைப்பற்றியது.
 
டெல்லி சட்டமன்றத்தின் 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஆம்ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 32.2 வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
 
மீதம் உள்ள 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் வரலாறு காணாத தோல்வியைச் சந்திதுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதால் அரவிந்த் கெஜ்ரிவால், 2015 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று மீண்டும் டில்லி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்