விஜயகாந்த் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டார் - சந்திரகுமார் நையாண்டி

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (18:42 IST)
14 மாவட்டச் செயலாளர்கள் கடிதம் எழுதிய விவகாரத்தில், தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திசை திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு விஜயகாந்த் ஆளாகிவிட்டார்.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கட்சியை கலைத்துவிடுங்கள் என்று 14 மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கடிதம் எழுதியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
 
இதையடுத்து தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இந்த கடிதம் பொய்யானது என்றும், தேமுதிகவில் இருந்து பிரிந்து சென்ற சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதல் டி.ஜி.பி. திரிபாதியிடம் புகார் அளித்தனர். 
 
இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மக்கள் தேமுதிக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், "தேமுதிகவின் கூடாரம் கலகலத்து போய்விட்டது. 14 மாவட்டச் செயலாளர்கள் பெயரில் எழுதப்பட்டிருக்கின்ற கடிதம் தேமுதிகவில் இன்றைக்கு ஒரு சூறாவளி புயலைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திசை திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு விஜயகாந்த் ஆளாகிவிட்டார்.
 
இந்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக தேவையில்லாமல் வீண் பழி சுமத்துகின்ற நோக்கில், எங்களுடைய 3 பேரையும், (சந்திரகுமார், பார்த்திபன், சேகர்), ஏற்கனவே திமுகவில் இணைந்திருக்கின்ற யுவராஜ் மற்றும் இன்று காலை அண்ணா திமுகவில் இணைந்த சவுந்திரபாண்டியையும் இணைத்து புகார் கொடுத்துள்ளனர்.
 
இந்த புகாரில் துளி கூட உண்மை கிடையாது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், சட்ட ரீதியாக அதனை சந்திப்போம். மக்களிடத்தில் இருந்து அந்த கடித விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அடுத்த கட்டுரையில்