ஆட்சிக்கும் பதவிக்கும் நெருக்கடி தரும் சொந்தங்கள்? - கலக்கத்தில் சசிகலா?

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (11:55 IST)
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் பதவி கேட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவின் குடும்பத்தினர் குடுமிப்பிடி சண்டை போடுவதால், அவர் கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், அவரின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளரக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரே, தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என தம்பிதுரை உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தினர். 
 
ஆனால், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தன்னுடைய பணியை செய்து கொண்டு அமைதியாக இருக்கிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து சசிகலாவை முதல்வராக்கும் முயற்சியில் எந்த மும்முரமும் அதிமுகவினர் காட்டவில்லை. 
 
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் பங்கெடுக்க விரும்பி, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சிலருக்கு முதல்வர் பதவியில் அமரவும் ஆசை இருப்பதாக தெரிகிறது.
 
சசிகலா தற்போது, அவரது சகோதரி மகன் தினகரனின் ஆலோசனை படி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பி.எஸ், தினகரனின் விசுவாசி என்பதால், அவரை வைத்தே ஓ.பி.எஸ்-ஐ தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க சசிகலா காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. ஆனால், இது சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும், அவரின் தம்பியான திவாகரனுக்கும் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. 
 
தினகரனின் கைக்கு முழு அதிகாரமும் போய் விடக்கூடாது என அவர்கள் நினைப்பதாகவும், அதனால், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் ஆட்சியிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புவதாக தெரிகிறது. தனக்கும், தன்னுடய மகனுக்கும்  முக்கிய பொறுப்புகள் தர வேண்டும் என திவாகரன் ஒருபுறமும், அதே கோரிக்கையில் தினகரன் ஒருபுறமும், முதல்வர் பதவியில் அமரும் ஆசையில் நடராஜனும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. 
 
இப்படி தன்னுடைய குடும்பத்தினர் குடுமிப்பிடி சண்டை போடுவதால், யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் சசிகலா இருப்பதாகவும், இந்த பிரச்சனை விரைவில் பூதாகாரமாக வெடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஒரு பக்கம் வளரும் ஓ.பி.எஸ், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெருகும் ஆதரவு, ஜெ.மரணம் உள்ளிட்ட சந்தேகங்கள், குடும்பத்தில் நடக்கும் சண்டை, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அனைத்தும் சேர்ந்து சசிகலாவை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்