உடை, பாவனை, கையசைப்பு - ஜெயலலிதாவாகவே மாறிய சசிகலா
புதன், 4 ஜனவரி 2017 (15:21 IST)
அதிமுக பொருளாலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா ஒவ்வொரு விஷயத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பின் தொடர்வதாக தெரிகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது தோழி சசிகலா கட்சியின் தலைமை ஏற்று, வழிநடத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் குரல் கொடுத்து வந்தனர். அதன்பின் அவர் கடந்த மாதம் 31ம் தேதி அதிமுகவின் பொருளாலராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
மேலும், அவரே தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையை தம்பிதுரை உள்ளிட்ட சிலர் முன்னிறுத்தி வருகின்றனர். எனவே, சசிகலா அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ், விரைவில் அவரின் பதவியை சசிகலாவிற்கு விட்டுத் தருவார் என அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் அதிமுகவின் தலைமை பொறுப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜெயலலிதாவை பின் தொடர தொடங்கியுள்ளார்.
ஜாதகம், வாஸ்து ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர் ஜெயலலிதா. எந்த முக்கிய நிகழ்வுகளும் அவரின் ஆஸ்தான ஜோதிடர்கள் குறித்து கொடுக்கும் நாளில்தான் நடக்கும். அதேபோல், சசிகலா பொதுச்செயலராக பதவியேற்றது, ஜோதிடர் குறித்து கொடுத்த டிசம்பர் 31ம் தேதிதான்.
அதன்பின் உடை மற்றும் சிகை அலங்காரம், காதில் அணியும் தோடு, பச்சைப் புடவை என அப்படியே ஜெ.வாக மாறினார் சசிகலா. இன்று முதல் அந்த பச்சை நிற புடவைத் தொடர்கிறது.
அதேபோல், ஜெ. வழக்கமாக பயன்படுத்தும் காரையே அன்றிலிருந்து சசிகலாவும் பயன்படுத்த தொடங்கியுள்ளார். முன் இருக்கையில் அமர்ந்து புன்னகைத்தவாறு, கட்சியினரை பார்த்து வணக்கம் சொல்லிக் கொண்டே செல்வது ஜெ.வின் ஸ்டைல். அதையே சசிகலா பின் தொடர தொடங்கியுள்ளார். அதேபோல், கட்சி அலுவலகம் வந்தால் பால்கனிக்கு சென்று, கீழே கூடியுள்ள கட்சியினரை பார்த்து, இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் இரு விரலை காட்டி புன்னகைப்பார் ஜெ. இன்று சசிகலா அதையும் செய்துள்ளார்.
கட்சி மற்றும் ஆட்சி இரண்டையும் தான் வழிநடத்த வேண்டுமென்றால், கட்சியினரும், பொதுமக்களும் தன்னை இன்னொரு ஜெயலலிதாவாகவே நம்ப வேண்டும் என்பதை அவர் உணந்துள்ளார். அதான் வெளிப்பாடுகள்தான் இவை அனைத்தும் என அதிமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.