ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் பதவி பறிப்பு? - கொறடா ராஜேந்திரன் ஆலோசனை

வெள்ளி, 3 மார்ச் 2017 (09:13 IST)
அரசுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பி.எஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு கொறடா ராஜேந்திரன், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில், தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் வந்த போது, அதிமுக கொறடா ராஜேந்திரன், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டு கடிதம் எழுதினார்.
 
ஆனால், சட்டசபை கூடியது போது, எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.எக்களும், அரசுக்கு எதிராக  ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதில் எம்.எல்.ஏ சரவணகுமார் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
எனவே, கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதால், இந்த 12 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏக்களின் பதவிகளை பறித்தால், அந்த 12 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், அது எதிர்கட்சியான திமுகவிற்கு சாதகமாக முடியும். எனவே, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை பாயாது என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், தக்க நேரத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கொறடா ராஜேந்திரன் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அவர் வழக்கறிஞர்கள் சிலரிடம் ஆலோசனை நடத்தி வருவதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
 
ஒருவேளை அவர்களின் பதவி பறிக்கப்பட்டால், தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பான சம்பவங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்