இறந்துபோனவர்களுக்கு கல் வைத்துப் பூசை செய்வது ஏன்?

வியாழன், 6 அக்டோபர் 2011 (14:16 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: இளம் வயதில் இறந்து போனவர்கள் அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் - குறிப்பாக பெண்கள், ஆவியாகச் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு வாரம் அல்லது ஆண்டுதோறும் பூஜை செய்வதையும் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஆவிகள் எவ்வளவு நாட்கள் உலகில் இருக்கும். ஏன்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 1991இல் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது, நண்பர் செல்வம் என்பவர் இருந்தார். அப்பொழுது அவர் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றாமலேயே வைத்துவிட்டு, ஒரு ஆவியைக் கூப்பிட்டு அந்த மெழுகுவர்த்தியை எரிய வைக்கிறேன் பார் என்று சொல்வார். சும்மா ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்வேன். ஆனால், ஏதோ செய்வார், திடீரென்று அந்த மெழுகுவரத்தி எரியும். பிறகு, திடீரென்று வேறு வேறு மொழிகளிலெல்லாம் பேசுவார்.

நாங்கள் இருந்த தெருவிற்கு பக்கத்து தெருவில் இருந்த தெலுங்கு பெண் ஒருத்தி காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டாள். திடீரென்று அந்தப் பெண் வந்து தெலுங்கில் பேசுகிறது. இவருக்கு தெலுங்கு சுட்டுப் போட்டாலும் வராது, தெலுங்கும் தெரியாது. இதுபோன்றெல்லாம் பார்த்து வியந்திருக்கிறோம். பிறகு ஆவிகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அதையெல்லாம் பார்த்திருக்கிறோம். பின்னர் நள்ளிரவில் இடுகாடு, சுடுகாடுகளுக்கெல்லாம் போவது என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். அந்த நேரத்தில் அப்படி ஒரு உலகம் இருப்பதாக எங்களால் உணர முடிந்தது.

தேகம், ஸ்தூல தேகம் என்பது மாதிரி, சூட்சும சக்திகள் என்பதும், அதாவது, ஆலஃபா, பீட்டா, காமா கதிர்கள் சுற்றிக் கொண்டிருப்பது போலவே, இதுபோன்ற ஆவிகளும் சுற்றுகிறது. இதனை நான் சின்ன வயதில் நம்பியது கிடையாது. ஆனால் இந்த நண்பர் மூலமாக அதனை நான் நம்பினேன். தற்பொழுது கூட அந்த நண்பர் சில நேரங்களில் ஆவிகளுடன் பேசுகிறார்.

நம்மிடம் வந்தவருடைய ஒரு ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் உங்களுடைய தாத்தாவிற்கு சரியாகச் சாப்பாடு போடால் இறந்துபோக வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்குத் தெரியாது என்னுடைய அப்பாவைக் கேட்டால்தான் தெரியும் என்று சொன்னார். பிறகு அவரும் அவருடைய அப்பாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவருடைய அப்பா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நான் அவரை ஒழுங்காகத்தான் கவனித்துக் கொண்டேன். அவர்தான் கடைசி காலத்தில் என்னிடம் கோபித்துக் கொண்டார். அதன்பிறகுதான் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்தது என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு அவருக்கு சந்தேகம் வந்து என்னிடம் வந்து, என்னுடைய தாத்தாவைக் கூப்பிட்டுக் கேட்க முடியுமா என்று கேட்டார். அவரிடம் நண்பருடைய முகவரி கொடுத்து இவரிடம் போய் கேளுங்கள் என்று அனுப்பி வைத்தேன். அவரும் சென்றிருக்கிறார். முதலில் இரண்டு முறை கூப்பிட்டும் அவருடைய தாத்தா வரவேயில்லை. மூன்றாவது நாள் கூப்பிட்ட போது வந்திருக்கிறார். அப்பொழுது, எனக்கு சாப்பாடே கொடுக்காமல் சாகடித்துவிட்டார்கள். பட்டினி கிடந்துதான் நான் இறந்தேன் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் இருக்கிறது.

இவர்கள் எவ்வளவு நாட்கள் இங்கு வாழ்கிறார்கள்?

இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுற்றியிருந்துவிட்டு அதன்பிறகு ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

ஆனால், ஒரு சிலர் அவர்களுக்கென்று ஒரு கல் வைத்து, படைத்து கும்பிடுகிறார்களே?

அது என்னவென்றால், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்காக. ஒரு சிலருக்கு மனசாட்சி உருத்தும். இறந்துபிறகு உருத்தும். இருக்கும் போது என்ன, ஏது என்றுகூட கேட்காமல், வெற்றிலை பாக்கு கூட வாங்கிக் கொடுக்காமல் இருந்திருப்பார்கள். ஆனால், போன பிறகு இரண்டு கவுளி வெற்றிலை, 40 பாக்கு வாங்கி வைத்துப் படைப்பார்கள்.

நமக்குத் தெரிந்தவர் ஒருத்தர் இருந்தார். அவருடைய அண்ணன் தம்பிகள் ஐந்து பேர். அவருடைய தாயை அவர் பார்ப்பார் என்று இவர் விட்டுவிடுவார். இவர் பார்ப்பார் என்று அவர் விட்டுவிடுவார். அந்த அம்மா கடைசியாக அனாதை ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துவிட்டார்கள். இதுபோன்றெல்லாம் இருக்காதீர்கள் என்று அவரிடம் சொன்னேன். இவர், அமாவாசை அமாவாசைக்கு எறும்பு புற்றுக்கெல்லாம் போய் அரிசி போட்டுக் கொண்டிருப்பார். இதெல்லாம் என்னங்க அநியாயம், பெற்ற தாய்க்கு அண்ணன் தம்பிகள் போட்டி போட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்கிறீர்கள். அதைவிட்டுவிட்டு அமாவாசைக்கு எறும்பிற்கு அரிசி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் தப்பு என்று சொன்னேன். இதுபோன்றெல்லாம் தவிர்த்து சரியாக பார்த்துக் கொண்டால் பாதிப்புகள் இல்லாமல் போகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்