நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா??

வியாழன், 27 அக்டோபர் 2016 (14:21 IST)
பொதுவாக விமான எஞ்சின்கள் செயலிழப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனினும், தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற சில அரிதான காரணங்களால் விமான எஞ்சின்கள் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. 


 
 
விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காது. 
 
விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், படிப்படியாக கீழே இறங்க துவங்கும். 
 
ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை வட்ட மடித்து அல்லது விமானத்தின் பேலன்ஸ் குறையாமல் குறிப்பிட்ட முறையில் வளைந்து சென்று விமானத்தின் இறங்கும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து ஓடுபாதையில் சரியாக இறக்க விமானிகள் முற்படுவர்.
 
எஞ்சின்கள் செயலிழக்கும்போது ஆட்டோபைலட் கட்டுப்பாட்டு சாதனங்களும் செயலிழக்கும். அப்போது எரிபொருள் சப்ளை தானியங்கி முறையில் நிறுத்தப்பட்டுவிடும்.
 
இந்த சூழலில் எஞ்சின்கள் செயலிழந்ததை சென்சார் உதவியுடன் கண்டுகொள்ளும், ராம் ஏர் டர்பைன் என்ற விசிறி தானாக இயங்கும். விமானத்தின் அடிப்பாகத்தில் மின் விசிறி போன்றே இருக்கும் இந்த கருவியானது வெளிக்காற்று விசை மூலமாக சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும்.
 
இந்த கருவியின் மூலமாக விமானத்தின் கட்டுப்பாட்டு சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியும்.
 
மேலும், விமானத்தின் பின்புறத்தில் இருக்கும் துணை பேட்டரி யூனிட்டிலிருந்து ஹைட்ராலிக் கருவிகளை இயக்குவதற்கான மின்சாரம் பெறப்படும். இந்த மின்சாரத்திலிருந்து திசை மாற்றும் அமைப்பு, பிரேக்குகள், லேண்டிங் கியர்கள் எனப்படும் விமான சக்கரங்களையும் இயக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்