வரலாறு காணாத வெற்றி… பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஹீரோவான இளம் வீரர்கள்!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஐந்தாம் நாளில் இந்திய அணி வெற்றிக்கு 321 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணி ட்ரா செய்ய முயலும் என நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இந்திய அணி அதிரடியாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற இளம் வீரர்களான நடராஜன், தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளனர்.

அறிமுகப்போட்டி நாயகர்கள்:-

இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களைக் கைப்பற்றி ஆஸி அணியை மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தினர். அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் சுந்தர் மற்றும் தாக்கூர் இணை அரைசதம் அடித்து ஆஸி பவுலர்களை மிரளச் செய்தனர். இவர்கள் இருவரும் ஏழாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது இந்திய அணிக்கு வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.


சிராஜ் செய்த மாயாஜாலம்:-

முதல் இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு மேல் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸியை 296 ரன்களுக்கு சுருட்டியது. இதற்கு முக்கியக் காரணியாக அமைந்தது சிராஜின் மாயாஜால பவுலிங்க்தான். இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார் சிராஜ். அதில் ஸ்மித், லபுஷான் மற்றும் வேட் ஆகிய அஸியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அடக்கம்.


கில் & பண்ட் அதிரடியால் மாறிய ஆட்டத்தின் போக்கு

இரண்டாவது இன்னிங்ஸில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது இந்திய அணி. பிரிஸ்பேன் மைதானத்தில் இதுவரை 235 ரன்களுக்கு மேல் இரண்டாவது இன்னிங்ஸில் சேஸ் செய்ததே இல்லை எனும் வரலாறோடு. ஆனால் இளம் கன்று பயமறியாது என்பது போல 21 வயது ஷுப்மன் கில் ஆஸியின் அனுபவம் வாய்ந்த ஹேசில்வுட், ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரை அனாயசமாக எதிர்கொண்டு 91 ரன்களை சேர்த்தார்.


அதே போல நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாண்டு வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடைசி வரை மனம் தளராமல் சிறப்பாக விளையாண்டு வெற்றியை உறுதி செய்தார். ரிஷப் பண்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 138 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியுள்ளார். இவர்களோடு இந்தியாவின் அனுபவம் மிக்க வீரர்களான புஜாராவும் இரு இன்னிங்ஸ்களிலும் பொறுப்பாக விளையாடியது பிரிஸ்பேன் மைதானத்தில் 33 ஆண்டுகளாக தோல்வியையே சந்திக்காத ஆஸி அணியை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்