ரஜினி, விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஷாலுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்? - பரபரப்பான பின்னணி

வியாழன், 23 பிப்ரவரி 2017 (17:03 IST)
தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் ரஜினி, விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகிய நடிகர்களுக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள். இவர்களின் படங்களுக்கு எதிராக சைலன்டாக ரெட் போட்டிருக்கிறார்கள் என்று சில தினங்களாக கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல். இந்தப் புகைக்கு பின்னணியில் உள்ள நெருப்பு என்ன?

 
சி 3 படம் வெளியான ஆறாவது நாளே படம் 100 கோடியை தாண்டியதாக அறிவித்தார்கள். விஜய்யின் பைரவா நாலே நாளில்  100 கோடியை எட்டியதாக பரவசப்பட்டார்கள். ஆனால், விநியோகஸ்தர்கள், இதெல்லாமே பொய், நஷ்டம் ஏற்பட்ட படங்களுக்கும் இதேபோல் பில்டப் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
 
கபாலி 300 கோடியை தாண்டி வசூலித்தது என்று அதன் தயாரிப்பாளர் தாணு அறிவித்து பொது மேடையில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார். இது நடந்த சில தினங்களுக்குப் பிறகு திருச்சியை சேர்ந்த சில திரையரங்கு உரிமையாளர்கள்  கபாலியால் நஷ்டம் என்று முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
 
அதேபோலத்தான் விஜய்யின் பைரவா படமும் பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்ததாகச் சொல்கிறார்கள். சூர்யாவின் சி 3, விஷாலின் கத்திச் சண்டை, ஜெயம் ரவியின் போகன் படங்களும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை தந்துள்ளது. சம்பந்தப்பட்ட  நடிகர்கள் நஷ்ட ஈடு தரவில்லையென்றால் அவர்களின் அடுத்தடுத்தப் படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தொழில் ஒத்துழைப்பு தருவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் விநியோகஸ்தர்கள் இந்த முடிவை தங்களுக்குள்ளாக எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று எந்த மொழி திரைத்துறையிலும் இல்லாத இந்தப் பிரச்சனை தமிழம்  சினிமாவை மட்டும் ஆட்டிப்படைக்க காரணம் தமிழக அரசின் மெத்தனம். திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை சீரமைக்காததும்,  முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்காததுமே மொத்தப் பிரச்சனைக்கும் மூலகாரணமாக உள்ளது.
 
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளுக்கு வழங்கும்பொழுது, டிக்கெட் கட்டணத்தை கணக்கில் கொள்வதில்லை.  முதல் 3 நாள்கள் தினம் ஐந்து காட்சிகள், ஒரு டிக்கெட் விலை 200 முதல் 2000 வரை நடிகர்களின் மாஸுக்கு ஏற்றபடி ஒரு  கட்டணத்தை நிர்ணயித்து அதனடிப்படையிலேயே படங்களை தருகிறார்கள். எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்பதற்கு  கணக்கில்லை. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் தருவதுதான் கணக்கு. இதனால்தான் தயாரிப்பாளர்கள் 100 கோடி என்கிறார்கள், விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நாங்க தெருக்கோடி என்கிறார்கள்.
 
டிக்கெட் கட்டணத்தைவிட பல மடங்கு விலை வைத்து டிக்கெட்டை விற்றுவிட்டு, முதலே அடையலை என்று  தயாரிப்பாளர்களுக்கு நாமம் போடும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களும் இருக்கிறார்கள். அதேபோல் அதிக  விலைக்கு படத்தை விற்றுவிட்டு விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் நஷ்டத்தில்விடும்  இருக்கிறார்கள். இவர்களின் இந்த சூதாட்டத்துக்கு மணிகட்ட அரசால் மட்டுமே இயலும்.
 
எடப்பாடியின் அரசு இதை செய்யுமா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்