கபாலியால் 3.10 கோடிகள் நஷ்டம்... சேலம் விநியோகஸ்தரின் சோகக்கதை

திங்கள், 27 பிப்ரவரி 2017 (09:59 IST)
கபாலி முதல் சி 3 வரை எல்லாமே நஷ்டம்தான் என்ற திருப்பூர் சுப்பிரமணியம் கொளுத்திப்போட்ட வெடி வெடிக்க  ஆரம்பித்திருக்கிறது. கபாலி, ரஜினி, தாணு என பலரது இமேஜை காலி செய்யும் விதத்தில் விமர்சனங்கள் வர  ஆரம்பித்திருக்கின்றன.

 
"கபாலி வெற்றி பற்றி ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். இனியும் விளக்கம் வேண்டுமென்றால் கபாலியின்  விநியோகஸ்தர்கள், திரையரங்குகளின் லிஸ்டை தருகிறேன்" என்று தாணு பதிலடி தந்ததும், 200 நாள்களை கடந்து கபாலி ஓடிக்கொண்டிருக்கும் மதுரை திரையரங்கின் உரிமையாளர் தாணுவை ஆதரித்து கருத்து சொன்னதும் தாணு தரப்புக்கு தெம்பாக  அமைந்தது. கபாலியின் கோவை ஏரியா உரிமை தராததால் திருப்பூர் சுப்பிரமணியம் வெறுப்பில் இதையெல்லாம் செய்கிறார்  என்ற தாணுவின் கூற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தது. ஆனால்...
 
கபாலியின் சேலம் விநியோகஸ்தர் நந்தா சொல்லியிருக்கும் பல விஷயங்கள் திருப்பூர் சுப்பிரமணியத்தின் கூற்றை மெய்ப்பிப்பது போல் உள்ளது. முக்கியமாக திருப்பூர் சுப்பிரமணியம், தாணு இருவரது பேச்சில் வெளிப்பட்ட வெறுப்பு நந்தாவின் பேச்சில் இல்லை. நஷ்டத்தையும், அதனால்பட்ட கஷ்டத்தையும் கண்ணியமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
 
"திருப்பூர் சுப்ரமணியம் அண்ணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 6 - 7 மாதமாக யாரிடம் போய்  சொல்வது என்று இருந்த குமுறலை அவர் வெளிப்படையாக சொன்னதில் மகிழ்ச்சி.
 
சிலர் கபாலி படம் 100 நாள் ஓடியது, 200 நாள் ஒடுகிறது எனச் சொல்கிறார்கள். மற்ற ஏரியாக்கள் பற்றி எனக்கு தெரியாது. சேலம் ஏரியாவை பற்றி மட்டும் சொல்கிறேன். எங்களுக்கு எம்.ஜி. விநியோக அடிப்படையில் 6.40 கோடிக்கு கொடுத்தார்கள். விளம்பரங்கள், க்யூப் உள்ளிட்ட அனைத்துமே சேர்த்து 7 கோடி ரூபாய் ஆனது. எங்களுக்கு 3.40 கோடி மட்டும் தான் பங்கு அடிப்படையில் வந்தது. 3.10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. என்ன பண்றது எனத் தெரியாமல் முறையாக போய்  கேட்டோம். அதற்கான விடை இப்போது வரை கிடைக்கவில்லை.
 
ஒரு படம் எவ்வளவு போகும் என்ற விலையை நிர்ணயம் செய்கிறார்கள், நாங்கள் புதிதாக வருவதால் எங்களுக்குத் தெரியாது. ரஜினி படங்களைப் பொறுத்தவரையில் முந்தைய படங்கள் எவ்வளவு வசூல், இப்போது வெளியாகியுள்ள டீஸர்,  விளம்பரங்களுக்கு என்ன சொல்கிறார்கள் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு தான் வாங்கினோம். நாங்கள் ஏமாந்துவிட்டோம் என சொல்ல முடியாது. விலை சரிதானா என்பது எங்களுக்குத் தெரியாது. பெரிய நாயகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வருவதில்லை. அப்படங்கள் வெளியானால் மட்டுமே எவ்வளவு வசூல் என்பதை எல்லாம் கூற முடியும்.
 
ஒரு படம் நன்றாக போகிறது என்று நீங்களே விளம்பரப்படுத்திக் கொள்ளாதீர்கள். அது அடுத்தாக புதிதாக படம் தயாரிக்கக்கூடிய  தயாரிப்பாளரையும் பாதிக்கும். கபாலி 300 கோடி ரூபாய் வசூல் என சொல்கிறீர்கள் என்றால் அதை வைத்து ரஜினி சாரின்  அடுத்த படத்தின் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை நிர்ணயம் செய்வார். படம் முடிந்து விநியோகம் செய்யும் போது, புதிதாக  வரும் தயாரிப்பாளரும் பாதிக்கப்படுவார். தயவு செய்து பொய்யாக மட்டும் விளம்பரப்படுத்தாதீர்கள். விநியோகஸ்தரிடம் எவ்வளவு வசூல் என்பதைக் கேளுங்கள்.
 
படத்தை எடுத்துவிட்டு, ஒவ்வொருத்தரும் என்ன செய்வது என முழித்து வருகிறார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொருவரும்  படத்தை வாங்கிவிட்டு எப்படி திணறி வருகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்" என்று தெரிவித்துள்ளார் நந்தா.
 
தோல்வியடைந்த படத்தை வெற்றி என்று தயாரிப்பாளர் கொண்டாடும்போது ஏற்படும் பின்விளைவுகள் கடுமையானவை. தயாரிப்பாளர் சொல்லும் வசூலை வைத்துதான் அடுத்தப் படத்துக்கான பட்ஜெட் போடப்படும். அந்த வசூல் தவறாக  இருக்கும்பட்சத்தில் எவ்வளவு பெரிய இழப்பு அடுத்துவரும் தயாரிப்பாளருக்கு ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய  வேண்டியதில்லை.
 
நந்தாவை தொடர்ந்து மேலும் சிலரும் கபாலியின் நஷ்டம் குறித்து பேச உள்ளதால், கபாலி மீண்டும் லைம் லைட்டுக்கு  வந்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்