பாவனா பாலியல் வன்முறை - பொறுக்கித்தனத்தை சினிமாக்களே ஊக்குவிக்கின்றன

புதன், 22 பிப்ரவரி 2017 (10:10 IST)
ஓடும் காரில் பாவனா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை திரைநட்சத்திரங்கள் கண்டித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு பெண்ணை அத்துமீறி காரில் கடத்தி பாலியல் வன்முறை செய்யும் மனோபாவம் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

 
பொறுக்கிகளையும், பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறவர்களையும் கொண்டாடுவதும், அவர்களை ஹீரோக்களாகவும்,  அவர்களின் அத்துமீறலை ஹீரோயிசமாகவும் கட்டமைத்து, இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டுவதும் நமது  சினிமாக்களே.
 
நாம் பல விஷயங்களை சினிமாவிலிருந்தே கற்றுக் கொள்கிறோம். நீதிமன்றம், காவல்நிலையம், சட்டசபை போன்ற பல்வேறு இடங்களையும் அதன் நடைமுறைகளையும் நேரடியாக அனுபவப்படுகிறவர்கள் மிகச்சொற்பம். இந்த இடங்களையும், அதன்  நடைமுறைகளையும் 90 சதவீத மக்கள் சினிமாக்களின் மூலமே தெரிந்து கொள்கிறார்கள். அதேபோல்தான் காதலையும்.  சினிமாக்கள் மூலமே காதல் குறித்த ஒரு சித்திரத்தை நாம் நமக்குள் ஏற்படுத்திக் கொள்கிறோம். காதலை நமக்கு  அறிமுகப்படுத்தும் முதல் விஷயமாக சினிமாவே இருக்கிறது.
 
சினிமாவில் காதல் எப்படி காட்டப்படுகிறது?
 
அதற்குமுன் ஒரு சின்ன நடைமுறை யதார்த்தத்தைப் பார்ப்போம். வேலைவெட்டி இல்லாத ஒருவன் தனது நண்பர்களையும்  சேர்த்துக்கொண்டு, பள்ளி செல்லும் மாணவிகளை தினமும் கமென்ட் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வருகிற  போகிற பெண்களுக்கெல்லாம் காதல் கடிதம் கொடுக்கிற அவன் பள்ளி மாணவியை மிரட்டி அவளது ஆசிரியையிடம்தர ஒரு  காதல் கடிதத்தை கொடுத்துவிடுகிறான். அவனை இந்த சமூகம் என்ன செய்யும்? செருப்பால் அடிக்கும்தானே?
 
நாம் மேலே பார்த்த இந்த வேலையைத்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகனும் செய்கிறான். யதார்த்தத்தில் கோபத்தை வரவழைக்கும் ஒரு விஷயத்தை நாம் திரையரங்கில் சிரித்துக் கொண்டே பார்க்கிறோம். எப்படி இந்த தலைகீழ்  மாற்றம் நடக்கிறது?
 
சினிமா பல விஷயங்களை நமக்குள் திணித்திருக்கிறது. ஹீரோ என்பவன் எவ்வளவு பொறுக்கியாக இருந்தாலும், ஹீரோயின்  அவனைத்தான் காதலிக்க வேண்டும், ஹீரோ எந்தளவு ஈவ்டீஸிங் செய்தாலும் ஏதோ ஒரு புள்ளியில் அவன் நல்லவனாக  இருப்பான்... இப்படி பல விஷயங்கள். இவையெல்லாம் ஹீரோ செய்யும் பொறுக்கித்தனங்களை பொறுக்கித்தனமாக அல்லாமல் ஒரு விளையாட்டாக நம்மை ரசிக்க வைக்கின்றன. ஆனால், படத்தைப் பார்க்கும் இளைஞன் - காதலை சினிமா மூலம் மட்டுமே  அறிந்தவன் - திரையில் ஹீரோ செய்வதை நடைமுறையில் செய்ய தலைப்படுகிறான். ஏன் என்றால் அவன் பார்க்கும் சினிமா  அதைத்தான் ஹீரோயிசமாகவும், அதை செய்கிறவனைதான் ஹீரோவாகவும் காட்டுகிறது. அவர்கள்தான் இந்த சமூகத்தில் அதிகம் சம்பாதிப்பவர்களாகவும், அதிகம் கொண்டாடப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
 
திரையில் பார்த்ததை நடைமுறையில் செயல்படுத்தும்போது அவன் ஹீரோ ஆவதற்குப் பதில் பொறுக்கியாகிவிடுகிறான். சதா பின்தொடர்ந்து தொல்லை தருகிற ஒருவனை சினிமாவில் ஹீரோவாக காட்டலாம், அவனை ஹீரோயின் காதலிக்கலாம். ஆனால் நடைமுறையில் அவன் செருப்படிதான் வாங்குவான். அவனுக்கு கிடைப்பதும் ஹீரோ பட்டமில்லை, பொறுக்கி  பட்டம்தான்.
 
அமர்க்களம் படத்தின் நாயகன் ஒரு ரவுடி. ஒரு பெண்ணை அவன் கடத்துகிறான். கடைசியில் அந்தப் பெண் அவனையே  காதலிக்கிறாள். அலெக்ஸ் பாண்டியனில் நாயகன் ஒரு சமூக விரோதி. அவன் ஒரு பெண்ணை கடத்துகிறான். கடைசியில்  அவள் அவனை காதலிக்கிறாள். இதேபோல் எத்தனை படங்களில் நாயகியை கடத்துகிற, கற்பழிக்கிற, பாலியல் தொந்தரவு  தருகிற நபர்களை ஹீரோக்களாக காட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
 
உண்மையில் பாவனாவின் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதலை திரையுலகினர் கண்டிப்பதாக இருந்தால் முதலில் பொறுக்கிகளை சினிமாவில் நாயகனாக சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதை செய்யாமல் வெறும் கண்டனம்  தெரிவிப்பதில் எந்த பலனுமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்