இன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்....!

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற  பெயரும் உண்டு. 

தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.
 
கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.
 
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து வரபில்லா ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரத முறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு  உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.
 
ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.
 
இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும். நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும். இந்த விரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்